| ADDED : நவ 13, 2025 02:49 AM
பெங்களூரு: கர்நாடகாவில், கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு இயக்கப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி., எனப்படும், கர்நாடகா சாலை போக்குவரத்துக் கழக சொகுசு பஸ்களில் பயணம் செய்யும் பயணியருக்கு இலவசமாக, 'நந்தினி' இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் நாட்டிலேயே மூன்றாவது மிக பெரியது. இங்கு தினமும் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணியர் வருகை தருகின்றனர். இத்தனை சிறப்பு வாய்ந்த விமான நிலையத்துக்கு ஏ.சி., சொகுசு பஸ்களை கே.எஸ்.ஆர்.டி.சி., இயக்குகிறது. இந்த சொகுசு பஸ்கள், மைசூரு, மங்களூரு, மடிக்கேரி, மணிப்பால், உடுப்பி உட்பட பல பகுதிகளில் இருந்தும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணியருக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வந்தன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக, 2019ம் ஆண்டு குடிநீர் பாட்டில்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி., சொகுசு பஸ்சில் விமான நிலையத்திற்கு பயணம் செய்யும் பயணியருக்கு மட்டும், மாநில அரசுக்கு சொந்தமான, புகழ்பெற்ற 'நந்தினி' இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய சிறிய ஸ்நாக்ஸ் பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் சொகுசு பஸ்சில் நேற்று பயணம் செய்தவர்களுக்கு 'நந்தினி' இனிப்புகள் அடங்கிய பெட்டியை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி வழங்கினார். அதுபோல, கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து தாவணகெரேவுக்கு நேரடியாக இயங்கும் சொகுசு பஸ் சேவையை கொடி அசைத்து அவர் துவக்கி வைத்தார். இலவச தொகுப்பில் உள்ளவை... தண்ணீர் பாட்டில் பாதாம் பால் பிஸ்கட் இனிப்பு, காரம் வகைகள் முறுக்கு கேக் சிறிய துண்டு மொத்த தொகுப்பின் எடை 250 - 300 கிராம்