உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை தேர்தலில் இலவசங்கள்... ஆதிக்கம் : முக்கிய பிரச்னைகளை மறந்த கட்சிகள்

சட்டசபை தேர்தலில் இலவசங்கள்... ஆதிக்கம் : முக்கிய பிரச்னைகளை மறந்த கட்சிகள்

புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. மக்களின் பிரச்னைகள் குறித்து பேச அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.டில்லி சட்டசபை தேர்தல் பிப். 5ல் நடக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, இம்முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டு, தீவிர பிரசாரம் செய்து வருகிறது.மத்தியில் ஆளும் பா.ஜ., தலைநகர் டில்லியும் தம்வசமே இருக்க வேண்டும் என, அதிரடி அரசியல் நடத்தி வருகிறது.இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன.இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே தினமும் ஒரு வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.ஆனால், தலைநகர் டில்லியின் காற்று மாசு, சட்டம்- ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து எந்த அறிவிப்புமே இல்லை.போட்டி போட்டுக் கொண்டு இலவசங்கள் வழங்குவதில்தான் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இருக்கின்றன.ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் ஆட்சி அமைத்தால், பாதுகாவலர்களை வேலைக்கு அமர்த்த, குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளார்.டில்லியில் ஏற்கனவே இலவச மின்சாரம், குடிநீர், மருத்துவம், அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி மற்றும் பெண்களுக்கு இலவச பஸ் சேவை வழங்கப்படுகிறது.மேலும், முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் நிதியுதவி, சஞ்சீவனி யோஜனா திட்டத்தின் கீழ், முதியோருக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை ஆகிய வாக்குறுதிகளை கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.அதேபோல், ஹிந்து கோவில் பூஜாரிகள் மற்றும் சீக்கிய குருத்வாராக்களின் கிரந்திகள் ஆகியோருக்கு மாதந்தோறும் 18,000 ரூபாய் நிதி வழங்குவதாகவும் ஆம் ஆத்மி ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரஸ்

ஆளுங்கட்சிக்கு கொஞ்சமும் சளைக்காமல் காங்கிரசும் பல வாக்குறுதிகளை வாரி வீசியுள்ளது. ஆட்சி அமைத்தவுடன் 'பியாரி தீதீ யோஜனா' திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.மேலும், 'ஜீவன் ரக்ஷா யோஜனா' திட்டத்தில் 25 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு, வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் எனவும் காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

பா.ஜ.,

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் டில்லி அரசின் மருத்துவம், மின்சாரம், இலவச பஸ் மற்றும் கல்விட் ஆகிய இலவச திட்டங்களை நிறுத்தி விடும் என ஆம் ஆத்மி பிரசாரம் செய்து வருகிறது.ஆனால், இலவச திட்டங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியே, 'டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்து நலத்திட்டங்களையும் தொடரும்.'தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ., ஆட்சி வந்தால் இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என பயமுறுத்துகின்றனர். ஆனால் இந்த திட்டங்களில் ஊழல் செய்வோர் களையெடுக்கப்படுவர்' என உறுதி அளித்துள்ளார்.மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ., தலைநகர் டில்லியிலும் ஆட்சி அமைத்தால் இரட்டை இயந்திர சக்தி கிடைக்கும் என பா.ஜ., பிரசாரம் செய்து வருகிறது.மேலும், இலவசம் பற்றிய அறிவிப்புகள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதால், பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும் இலவசங்களை எதிர்பார்க்கலாம்.

முக்கிய பிரச்சனைகள்

அதேநேரத்தில், காற்று மாசுதான் டில்லியின் மிகமுக்கியமான பிரச்னை. அதற்கு தீர்வு காணும் திட்டம் குறித்து எந்தக் கட்சியும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஒவ்வொரு குளிர்காலத்திலும் டில்லி மக்கள் காற்றுமாசால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசை கட்டுக்குள் வைக்க திட்டம் வேண்டும் என டில்லி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தலைநகர் டில்லியில் கடந்த நவம்பர் மாதம் காற்றின் தரக் குறியீடு 490ஐ தாண்டி மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றனர். நச்சுக் காற்றால் ஏராளமானோர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டனர்.அதேபோல, யமுனை ஆற்றில் அதிக அளவு அமோனியா கலப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தண்ணீரை சுத்திகரிக்க முடியாமல் திணறின. அதனால் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடியது.மழைக் காலத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் திறந்தவெளி கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து பலர் உயிரிழந்தனர். மழைநீர் வடிகால் தூர்வாரப்படாததால், ராஜிந்தர் நகர் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளத்தில் சிக்கி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மூவர் உயிரிழந்தனர்.

சட்டம் - ஒழுங்கு

அதேபோல, நாட்டின் தலைநகரான டில்லியில் சட்டம் - ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. துப்பாக்கிச் சூடு சர்வசாதாரணமாக நடக்கிறது. பல சிறுவர்களிடம் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சகமாணவனை துப்பாக்கியால் சுட்ட பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன.ஆனால், தேர்தல் வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. தொலைநோக்கு பார்வையுடன் டில்லி மாநகரின் வளர்ச்சி குறித்து எந்த திட்டங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை.இதுகுறித்து, பாரதிய லிபரல் கட்சி தலைவர் முனிஷ் குமார் ரைசாடா கூறியதாவது:கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளார். இலவச வழங்கும் கலாசாரத்தை ஊக்குவிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார். வேலை வாய்ப்பு, ஒப்பந்த ஊழியரை பணி நிரந்தரம் செய்தல் ஆகியவற்றை ஆம் ஆத்மி அரசு புறக்கணித்து விட்டது. இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் போது கெஜ்ரிவால் இலவசங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். அதைப் பின்பறி மற்ற கட்சிகளும் வாக்காளர்களைக் கவர போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது. ஓட்டுக்கு பணம் வழங்குவது போன்றதுதான் இந்த அறிவிப்பும். இதை விட ஒழுக்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார். பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் நிதின் சிங், டில்லி சட்டசபை தேர்தலில் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்கள் அனைத்துமே பொய்யான வாக்குறுதி. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திருந்தால், இதுபோன்ற போலி வாக்குறுதிகள் தேவைப்பட்டு இருக்காது,”என்றார்.மொத்தம் 70 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பின், 8-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை