| ADDED : பிப் 22, 2025 08:29 PM
டேராடூன்: உத்தரகாண்ட்டில் காடு வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து, ஐபோன்கள், லேப்டாப்களை அதிகாரிகள் வாங்கியிருப்பது சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிய வந்துள்ளது. காடுகளில் நடப்படும் மரங்களில் 60 முதல் 65 சதவீதம் மரங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று வன ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், உத்தரகாண்டில் 2017 முதல் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் 33 சதவீத மரங்களின் வளர்ச்சியே இருந்துள்ளது. காடு வளர்ப்புக்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டும், அதனை வேறு சில நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருப்பது சி.ஏ.ஜி., அறிக்கையில் தற்போது தெரிய வந்துள்ளது. நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.13.86 கோடியை, ஐபோன்கள், லேப்டாப்கள், குளிர்சாதனப் பெட்டிகள் வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சொந்தப் பயணச் செலவுகள், சட்ட நடவடிக்கைகளுக்கான செலவு, சபாரி திட்டங்களுக்கும் செலவு செய்துள்ளனர். 188.6 ஏக்கர் வன நிலங்களை வனம் சாராத பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டதாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சி.ஏ.ஜி., அறிக்கையை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.