தங்கவயல் செக் போஸ்ட்!
* கனவு பலிக்குமா?ஸ்டேட் அளவில் முதல் தொழில் நகரமாக உருவான இடம் தான், கோல்டு சிட்டி. இதற்கு பிறகு தான் பிற சிட்டிகளுக்கு தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், முதல் தொழில் நகரில் தொழில் வளமே இல்லாமல் போனது. வேலை இல்லா பட்டதாரிகள் பலர் ஊரை விட்டு, நாட்டை விட்டு, பிற இடங்களுக்கு பறக்கிறாங்க. எப்படியோ, 2024 பட்ஜெட்டில், கோல்டு சிட்டியில் தொழிற் பூங்கா அமைக்க போவதாக மா.அரசு அறிவிச்சது. இதன் பணிகள் ஆரம்பமாகி பல இடத்தில் பெயர் பலகைகளை நிறுவி இருக்காங்க. உள்கட்டமைப்பு ஏற்படுத்த, இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கணுமாம். பல நுாறு, 'சி' எதிர்ப்பார்ப்பு இருக்குதாம். இதுக்காக பல கனவுகளை காண்கிறாங்க. என்ன செய்ய போறாங்களோ?பாதுகாப்புக்கு போலீஸ் பயிற்சி மையமே வரப் போகுது. மற்ற தொழில்கள் என்னென்ன வரப்போகுதோ. கோல்டு விளைந்த மண்ணில் பல தொழில்கள் உற்பத்தி ஆகப் போவதாக பலர் நம்பி இருக்காங்க. பூ காரங்க சர்வே செய்தாங்க. கை காரங்க வடிவம் கொடுத்தாங்க. தொழில் பூங்கா யாரோட ஆட்சியில் உதயமாகுமோ?-------* சிறந்த மனிதவள விருது?மனித வள மேலாண்மைக்கு சிறந்த தொழிற்சாலை பெமல் தான்னு தேசிய விருதான, 'கோல்டன் மயில்' கிடைச்சிருக்கு; வெரிகுட்.உண்மைகளை மறைத்து பெருசா மதிப்பாய்வு செய்து, இந்த விருது வழங்கி இருக்காங்களோ. இதுக்காக ஒருமுறை ஜோரா கையை தட்டணுமாம். அப்படி என்ன பெருசா மனித வளத்தை உயர்த்தினாங்கன்னு தெரியலையேன்னு, பணி நிரந்தரம் ஆக்க 26 நாட்கள் போராடிய ஒப்பந்த ஊழியர்கள் குமுறும் சப்தம் கேட்குது. 'இந்த கம்பெனியில் மனித வளத்தை மெல்ல குறைத்ததால் தான் விருது வழங்கி சபாஷ் வாங்கி இருக்கலாம்'னு தொழிலாளர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.------* தொகுதி பிரிப்பு?கோல்டு சிட்டி தொகுதியை மறுசீரமைப்பு செய்யப் போறாங்களாம். இதுக்காக ப.பேட்டையில் உள்ள சில கிராமங்கள் கோல்டு சிட்டியில் வந்து சேரப்போகுதாம். கோல்டு சிட்டியில் உள்ள சில கிராமங்கள் வேறொரு தொகுதியோடு சேரும் வேலைகள் நடந்து வருதாம்.பாரம்பரியமாக இருந்த கோல்டு சிட்டி - தனி தொகுதி தகுதியை பறிக்கும் உள் வேலையை சீரியசாக நடத்தி வராங்களாம். தொகுதியை பிரிக்கும் வேலையை செய்து வரும் வட்டாரத்தின் ஆபீசர்களே இந்த தகவலை கசிய விட்டிருக்காங்க. ஜாதி அடிப்படையிலான வாக்காளர் எண்ணிக்கை, கணக்கெடுப்பின்படி இந்த மாற்றம் வரப் போகுதாம். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்குது. ஆதரவு, எதிர்ப்புன்னு இரண்டு தரப்பிலும் விமர்சனங்கள், விவாதங்கள் தொடங்கி இருக்கு.--------* செங்கோட்டைக்கு பயணம்? 'கோல்டு மைன்ஸ்' முன்னாள் தொழிலாளர்கள், அவர்களின் முன்னாள் ஆபீசர்கள் தயவில் செங்கோட்டை நோக்கி போக போறாங்களாம். பழைய நிலுவை தொகையை கேட்டு வாங்கப் போறாங்களாம்.கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு இருக்கும் போது, இந்த செங்கோட்டை பயணம் பயன் தருமா? ஏற்கனவே, புல்லுக்கட்டு கட்சியின் மக்களவை உறுப்பினர் 18 சங்கத்துக்காரங்கள ஒண்ணு கூடி வாங்கன்னு சொல்லி இருக்காரு. இதில் எத்தனை சங்கம் ஒண்ணா கைகோர்த்து இருக்குதோ.'அது சரி... ஒன்று சேர மாட்டாங்க என தெரிந்து தானே ஒண்ணு கூடி வரணும்'னு சொல்லி அவர், 'ஆப்' செய்திருக்காரு'ன்னும் தொழிலாளர்கள் மத்தியில் பேசிக்கிறாங்க!***