கவர்னருக்கு எதிரான அரசின் மனுக்கள்; ஜனாதிபதி வழக்கு தீர்ப்புக்கு பின் விசாரணை
டில்லி சிறப்பு நிருபர்
'கவர்னரின் அதிகாரம் குறித்து, ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பின், தமிழக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நடத்தலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வது குறித்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, கலைஞர் பல்கலை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழக விளையாட்டு பல்கலை மசோதாவுக்கு கவர்னர் அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் கவர்னர் செயல்பட வேண்டும். அதை மீறி மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் அனுப்பி வைத்திருக்கிறார்' என, வாதிட்டார்.அப்போது பேசிய தலைமை நீதிபதி கவாய், ''ஏற்கனவே கவர்னரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜனாதிபதி, 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வர வேண்டி இருக்கிறது. நவம்பர் 21க்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். எனவே, தமிழக அரசின் இந்த புதிய மனுக்களை அந்த தீர்ப்பு வெளியான பின் விசாரிக்கலாம். என்னுடைய பதவிக்காலம் 4 வாரம் தான் இருக்கிறது. அதற்குள் வழக்கில் முடிவு தெரியும்,'' எனக்கூறி, விசாரணையை ஒத்தி வைத்தார்.