கொரோனா உபகரணங்களில் முறைகேடு எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவு
பெங்களூரு: கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு பற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உள்ளது.கர்நாடகாவில் கடந்த 2020ல் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்றது. தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் அதிகரித்தன. கொரோனா பரவலை தடுக்க சுகாதார துறை சார்பில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், பி.பி.இ., கிட்ஸ், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன.அதிக விலை கொடுத்து மருத்துவ உபகரணங்களை வாங்கி, பா.ஜ., அரசு 2,200 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா குற்றம் சாட்டி இருந்தார்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், கொரோனா மருத்துவ உபகரண முறைகேடு குறித்து விசாரிக்க, ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, முறைகேடு தொடர்பான இடைக்கால அறிக்கை, முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பின், சட்டசபை விவகார அமைச்சர் எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில், கொரோனாவை கட்டுப்படுத்த பா.ஜ., அரசு 7,223.64 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறி உள்ளது.ஆனால், எவ்வளவு முறைகேடு நடந்தது என்பதை ஆணையம் சுட்டிக்காட்டவில்லை. 500 கோடி ரூபாயை மீட்டெடுக்க கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது. கொரோனாவை கையாண்ட பல துறைகளிடம் இருந்து 55,000 ஆவணங்களை பெற்று, ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.மாநிலத்தின் 31 மாவட்டங்களின் சுகாதார துறைகளிடம் இருந்து, இன்னும் சில ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள அம்சங்களின் உண்மை தன்மையை கண்டறிய, அமைச்சரவை துணை குழு அமைத்து உண்மை கண்டறியப்படும். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடவும், அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.