கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை; ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம் : கேரளாவில் வழக்கமாக, ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, நேற்று முன்தினம் பருவமழை துவங்கியது. இதையடுத்து, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை - முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதன் காரணமாக, புன்னபுழா ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதேபோல் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலங்காரா அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக அணையின் மதகுகள் நேற்று திறந்துவிடப்பட்டன. தொடர் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியதன் காரணமாக, கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, பத்தனம் திட்டா, எர்ணாகுளம் மாவட்டங்களில் சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மேலும், பல குடியிருப்பு வீடுகளும் சேதமடைந்தன.இதற்கிடையே, குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து தமிழகத்தின் திருநெல்வேலி நோக்கி, நேற்று விரைவு ரயில் சென்றது. கேரளாவின் திருச்சூர் அருகே இந்த ரயில் கடந்த போது, எதிர்பாராதவிதமாக எலக்ட்ரிக் கேபிள் மீது மரம் வேரோடு சாய்ந்தது. இதைப்பார்த்த ரயில் டிரைவர், உடனே ரயிலை நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், மீட்புக்குழுவினருடன் இணைந்து மரத்தை அகற்றியபின், ரயில் புறப்பட்டது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலெர்ட்' விடுத்து உள்ளது.
விமான சேவை டில்லியில் பாதிப்பு
டில்லியில், நேற்று இடியுடன் கனமழை பெய்ததால், பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதுடன், சாலைகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததால், போக்குவரத்தும் முடங்கியது. மணிக்கு 82 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், நேற்று அதிகாலை விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.டில்லியில் இறங்க வேண்டிய, 49 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழல் பந்தலின் கூரை சரிந்து விழுந்ததால் பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.