மூலிகை சூழ்ந்த கப்பதகுட்டா
அதிகாலையே மலையை முத்தமிடும் மேகங்கள். கரும்புகையை போன்று நகர்ந்து செல்லும் மேகங்களுக்கு நடுவே எட்டிப்பார்க்கும் மலை குன்று. சுற்றிலும் கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை. இந்த அற்புதத்தை காண விரும்பினால், கப்பதகுட்டாவுக்கு வாருங்கள்.கதக்கில் உள்ள கப்பதகுட்டா, கர்நாடகாவின் சஹ்யாத்ரி என்றே பிரசித்தி பெற்றது. மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் நிறைந்துள்ள அற்புதமான சுற்றுலா தலமாகும். இங்குள்ள இயற்கை எழில்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கப்பதகுட்டாவில் கால் பதித்தால் போதும், ஆகாயமே நமது கையில் என்ற உணர்வு ஏற்படும்.வறட்சி மாவட்டம் என்ற பெயர் பெற்ற கதக்கில் அமைந்துள்ள கப்பதகுட்டா, நம்மை புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும். மழைக்காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை மிகவும் அதிகம்.கப்பதகுட்டாவில் டிரெக்கிங் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. எனவே இளைஞர்கள் அதிகம் வருகின்றனர். கப்பதகுட்டா மலை அடிவாரத்தில் நின்று பார்த்தால், பூமித்தாய் பச்சை நிற சேலை உடுத்தி நிற்பதை போன்று தோன்றும். இதை கண்டு ரசிக்க இரண்டு கண்கள் போதாது.கதக், முண்டரகி மற்றும் ஷிரஹட்டி தாலுகாக்களில் 81,000 ஏக்கர் பரந்து விரிந்துள்ள கப்பதகுட்டா, சுற்றுலா பயணியரை கை வீசி அழைக்கிறது. கப்பதகுட்டா மலைப்பகுதியில் வீசும் காற்று, மிகவும் துாய்மையானது என, மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.துாய்மையான காற்றை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் தினம் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.ஒரு முறை கப்பதகுட்டாவுக்கு சென்றுவிட்டால், அங்கிருந்து வெளியே வரவே மனம் வராது. அபாரமான மருத்துவ மூலிகைகளை தன்னுள்ளே வைத்துக்கொண்டு, துாய்மையான காற்றை தருகிறது.தற்போது டிரெக்கிங் செல்ல தகுந்த சூழ்நிலை உள்ளது. ஹாவேரி, பாகல்கோட், ஹூப்பள்ளி, தார்வாட், கொப்பால், விஜயபுரா, பெலகாவி உட்பட, மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் டிரெக்கிங் செய்யவும், இயற்கையை ரசிக்கவும் வருகின்றனர்.வறட்சி காலம், மழை பற்றாக்குறையால் கப்பதகுட்டா வறண்டு காணப்பட்டது. தற்போது பெருமளவில் மழை பெய்ததால், பசுமையாக மாறியுள்ளது. இப்போது வந்தால் கப்பதகுட்டாவின் இயல்பான அழகை ரசிக்கலாம், ஆனந்திக்கலாம். ஒரு முறையாவது இங்கு வந்து, அற்புத உணர்வை அனுபவியுங்கள். - நமது நிருபர் -