| ADDED : ஜன 07, 2024 02:33 AM
பெங்களூரு : “மூன்று துணை முதல்வர்கள் நியமனம் என்பது, வெறும் வதந்தி. இது குறித்து, எங்கும் ஆலோசனை நடக்கவில்லை,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.பெங்களூரு, சதாசிவநகரின் தன் இல்லத்தில், நேற்று அவர் கூறியதாவது:துணை முதல்வர்கள் நியமனம் குறித்து, அமைச்சர்கள் கூறுவது தனிப்பட்ட கருத்தாகும். அமைச்சர் ராஜண்ணா கூறியதும், அவரது தனிப்பட்ட கருத்து. அவர்களின் கண்ணோட்டத்தில் கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் நல்லது என, தோன்றியிருக்கலாம். இதை பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்ய வேண்டும். மேலிடத்தின் முடிவே, என் முடிவாகும்.மூன்று துணை முதல்வர்கள் நியமனம் என்பது, வெறும் வதந்தி. இது குறித்து, எங்கும் ஆலோசனை நடக்கவில்லை.அமைச்சர்கள் ஒவ்வொரு காரணத்துக்காக, டில்லிக்கு செல்கின்றனர். அப்போது கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, கர்நாடக பொறுப்பாளரை சந்திக்கின்றனர். கட்சி, ஆட்சியில் இருக்கும்போது, மேலிடத்தின் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். இது சகஜமான விஷயம். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி, என்னிடம் யாரும் கூறவில்லை. நான் கோலார் தொகுதியில் போட்டியிட உள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியானதை நானும் கவனித்தேன். நான் போட்டியிடுவது குறித்து, ஆலோசிக்கவில்லை. கட்சி மேலிடம் உத்தரவிட்டால், அடுத்த கட்ட முடிவை எடுப்பேன்.கஸ்துார்பா சாலையில் உள்ள விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்துக்கு இ மெயில் வழியாக மிரட்டல் வந்துள்ளது. ஐ.பி., முகவரி அடிப்படையில் விசாரணை நடத்துவர்.இவ்வாறு அவர் கூறினார்.