உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிலை கடத்தல் கோப்புகள் மாயமானது எப்படி? தமிழக அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது! கேள்வி கேட்டு சம்மன் அனுப்பியது சுப்ரீம் கோர்ட்

சிலை கடத்தல் கோப்புகள் மாயமானது எப்படி? தமிழக அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது! கேள்வி கேட்டு சம்மன் அனுப்பியது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் காணாமல் போய் விட்டன. 'சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இந்த ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். அத்துடன், கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான திருடப்பட்ட கோப்புகளை உடனடியாக மீட்டு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை, மாநில அரசு சரியாக பின்பற்றவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, ''சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ''இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போதும் போலீஸ் துறையில் உயர் பதவியில் உள்ளனர். கோப்புகள் திருடப்பட்டதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என, வாதங்களை முன் வைத்தார்.அந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறினர்.இவ்வளவு முக்கியமான ஒரு விவகாரத்தை, மாநில அரசு உரிய கவனம் செலுத்தி விசாரிக்கவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்புவதாக தெரிவித்தனர்.வழக்கு தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் தனிப்பட்ட முறையில், ஜனவரி, 27ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜன., 31ல், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், உள்துறை செயலர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதி வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
டிச 21, 2024 05:39

சார் அந்த குடும்பம் விஞ்ஞான முறைப்படி செய்வதில் வல்லவர்கள் என்று பட்டம் பெற்றவர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள் , யானை தன்தலையில் மண்ணள்ளி போட்டுக்கொள்வதும் தமிழக வாக்காளர்கள் இவர்களை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைத்ததும் ஒன்றே , இன்று தமிழக மாநிலத்தின் கடன் 8 லட்சம் கோடிகள் என்பதினை நினைவில் வைத்து கொள்ளுங்க வாக்காளர்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை