|  ADDED : ஜன 01, 2025 05:19 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
புதுடில்லி: தங்கள் நாட்டு சிறைகளில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரத்தை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. அதேபோல், நம்நாட்டு சிறைகளில் வாடும்  பாக்., மீனவர்கள் குறித்த விவரத்தை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கி உள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. இதனால், எல்லை தாண்டி செல்பவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றனர்.  அப்பாவி மக்கள், மீனவர்கள், பாதுகாப்பு படையினர் அடங்குவர். அவ்வாறு சிறையில் அடைக்கப்படுபவர்கள் நீண்ட காலமாக  சிறையில் வாடி வருகின்றனர். அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறைகளில் உள்ள அப்பாவி மக்கள், மீனவர்கள் குறித்த விவரங்களை பரிமாறிக் கொள்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே, தூதரக ரீதியில் கடந்த 2008 ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில்,  ஒவ்வொரு ஆண்டும் ஜன.,1 மற்றும் ஜூலை1ல் இந்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும்.  அந்த வகையில்,   இரு நாடுகளும் இன்று  அறிக்கையை பரிமாறிக் கொண்டன.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பாகிஸ்தானைச் சேர்ந்த 381 அப்பாவி மக்கள் மற்றும் 81 மீனவர்கள் இந்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த 49 அப்பாவி மக்கள் மற்றும் 217 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர்.இரு நாடுகளிலும் உள்ள கைதிகள் மற்றும் மீனவர்கள் உட்பட அனைத்து மனிதாபிமான விஷயங்களுக்கும் முன்னுரிமை அளித்து தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மத்திய அரசின் முயற்சியால், 2014 முதல் 2,639 மீனவர்கள் மற்றும் 71 பொது மக்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். 2023 ல் மட்டும் 478 இந்திய மீனவர்கள் மற்றும் 13 அப்பாவி மக்கள் பாகிஸ்தான் சிறையில்  இருந்து விடுவிக்கப்பட்டனர் எனக்கூறப்பட்டு உள்ளது.மேலும், பாகிஸ்தானிடம் இந்தியா முன் வைத்த கோரிக்கைகள்*பாகிஸ்தானில் காவலில் உள்ள மீனவர்கள், அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களை முன்கூட்டியே விடுவித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும்.*தண்டனை காலம் முடிந்த 183 மீனவர்கள் மற்றும் அப்பாவி மக்களை உனடியாக விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். *சிறையில்  இருக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு தூதரக ரீதியில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். அங்கு இந்தியா திரும்ப காத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். *இந்தியா சிறையில் 76 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் உள்ளது. அவர்களின் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தானா  அல்லது இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.