ராம்நகர், : ''தேசிய அரசியலுக்கு செல்ல மாட்டேன். கடந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட்டு இருந்தால், காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் தோற்று இருப்பார்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் கூறினார்.ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு ரூரலில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்ற பயத்தில், டாக்டர் மஞ்சுநாத்தை களம் இறக்கி விட்டு, யோகேஸ்வர் வேடிக்கை பார்க்கிறார் என்று, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கூறி உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரலில் போட்டியிட, கட்சி எனக்கு வாய்ப்பு தரவில்லை. நான் போட்டியிட்டு இருந்தால், சுரேஷ் தோற்று இருப்பார்.சுரேஷை விரட்டி அடிக்கவே, டாக்டர் மஞ்சுநாத்தை அழைத்து வந்து உள்ளோம். சுரேஷுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் மஞ்சுநாத்தை விமர்சிக்க ஆரம்பித்து உள்ளார். 'வெற்றி பெறுவோம்' என்று நம்பிக்கை இருந்தால், வாக்காளர்களுக்கு அவர் ஏன், பணம் கொடுக்கிறார்.கடந்த தேர்தலில் முனிரத்னா, காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தார். அப்போதே ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதியில் பா.ஜ., 30,000 ஓட்டுகள் அதிகம் பெற்றது. இப்போது முனிரத்னா, எங்கள் கூட்டணியில் இருக்கிறார். இதனால் மஞ்சுநாத்தின் வெற்றி உறுதி.சென்னப்பட்டணாவில் வரும் 19ம் தேதி பா.ஜ., - ம.ஜ.த., மாநாடு நடக்கிறது. முன்னாள் முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, டாக்டர் மஞ்சுநாத் பங்கேற்கின்றனர். இரு கட்சி தொண்டர்களும், ஒருங்கிணைந்து சென்று, மஞ்சுநாத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். தேசிய அரசியலுக்கு செல்லும் ஆசை எனக்கு இல்லை. மாநில அரசியலில் தொடர்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.