சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசிகள் ஆம் ஆத்மி - பா.ஜ., கவுன்சிலர்கள் மோதல்
பகர்கஞ்ச்:வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி அடைக்கலம் அளிப்பதாகக் கூறி எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியதால், எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.மாநகராட்சியின் கூட்டம் பிற்பகல் 2 மணிக்குத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 3 மணி ஆகியும் மேயர் வராததால், முன்னதாகவே அரங்குக்கு வந்த கவுன்சிலர்களால் கூச்சல் நிலவியது.பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து, இருக்கைகள் மீது மேல் ஏறி, ஆம் ஆத்மி கட்சியை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.'சட்டவிரோத ரோஹிங்கியாக்களும், வங்கதேசத்தில் குடியேறியவர்களும் ஆம் ஆத்மியின் நண்பர்கள்' மற்றும் 'பொய்யர் கெஜ்ரிவால், வெட்கப்படுகிறோம்' என்று சில பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது.தாமதமாக வருவதை கண்டித்து மேயருக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.மேயர் வராததை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் விமர்சித்ததுடன், சபையை துவங்கும் முன் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர்.இதற்கு பதிலடியாக, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், நாட்டின் முதல் சட்ட அமைச்சர் குறித்து பார்லிமென்ட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை குறிவைத்து, கோஷங்களை எழுப்பினர்.அம்பேத்கரின் பாரம்பரியத்தை பா.ஜ., இழிவுபடுத்துவதாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.சட்டவிரோத வங்கதேசி குடியேறிகள் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் ஆதாயத்திற்காக சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஆதரிப்பதாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாகவும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.