புதுடில்லி:டில்லியில் வங்கதேச பிரஜைகள் சட்டவிரோதமாக குடியேறுவதற்கு உதவி செய்யும் மிகப்பெரிய நெட்வொர்க்கை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த வங்கதேச தம்பதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அவர்களுக்கு இந்திய பிரஜைக்கான அனைத்து ஆவணங்களும் கிடைக்க போலியாக பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.அதுபோன்று டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச பிரஜைகளை கண்டுபிடித்து, நாடு கடத்தும்படி கோரிக்கை எழுந்தது. துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் முஸ்லிம் அமைப்பினர் முறையிட்டனர்.இதையடுத்து, டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். போலீசாரும் டில்லியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரத்தில் முக்கிய நிகழ்வாக, சட்டவிரோதமாக டில்லிக்கு வரும் வங்கதேசிகளுக்கு இந்திய பிரஜைக்கான ஆவணங்களை போலியாக தயாரித்துக் கொடுத்த கும்பல் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதுதொடர்பாக நகர தெற்கு இணை போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் ஜெயின் கூறியதாவது:இரண்டு வங்கதேசத்தைச் சேர்ந்த பிலால் ஹோசன், 28, மற்றும் அவரது மனைவி சப்னா, 23, ஆகிய இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் இணைந்து செயல்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமினுார் இஸ்லாம், 37, குருகிராமைச் சேர்ந்த ஆஷிஷ் மெஹ்ரா, 23, ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள், மிகப்பெரிய நெட்வொர்க்குடன் இயங்குவது விசாரணையில் தெரிய வந்தது. சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழையும் வங்கதேசிகளுக்கு நீண்ட காலமாக இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.இவர்கள் கொடுத்த தகவலின்படி, ஏராளமானோர் டில்லிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியது தெரிய வந்துள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.இந்த நெட்வொர்க்கில் உள்ளவர்களை கைது செய்யும் பணி நடக்கிறது. அத்துடன் வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவ பயன்படுத்தப்படும் 'இரு கழுதைப்பாதை'கள் கண்டறியப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் துர்காபூரில் இருந்து மேகாலயாவின் பாக்மாராவிற்கு இடையே இந்த பாதைகளை சட்டவிரோத குடியேறிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த பாதையில் இவர்கள் நடந்தே வந்துள்ளனர்.பின் அங்கிருந்து அசாம் மாநிலத்தின் கிருஷ்ணாய், நியூ பொங்கைகான் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ளனர்.போலி ஆதார் அட்டை தயாரித்துக் கொடுக்க ஒரு நபரிடம் இருந்து 4,000 முதல் 5,000 ரூபாய் வசூலித்துள்ளனர்.பிலால் ஹோசன் 2022ம் ஆண்டு மேகாலயா - அசாம் எல்லை வழியாக நம் நாட்டிற்குள் நுழைந்து தன் மனைவியுடன் டில்லியில் குடியேறியுள்ளார். இவர் குருகிராமில் காஸ்மெடிக் கடை மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்தார். அவரிடம் போலி ஆதார், பான்கார்டுகள் உள்ளன.இந்த கைது நடவடிக்கைக்குப் பின், தெற்கு டில்லி காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள வங்கதேச பிரிவுகளை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.13 வங்கதேசிகள் நாடு கடத்தல்
நகரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி
சோதனையின்போது, ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. அப்போது, கபஷேரா பகுதியில்
வசித்த வங்கதேச பெண்ணை போலீசார் அடையாளம் கண்டனர்.அவரிடம் பான்
கார்டு மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட போலி இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தன.
டில்லியில் அவர் நான்கு ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரிய
வந்தது.அதேபோல், அர்ஜன்கர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 28ம்
தேதி ஏழு வங்கதேசிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உட்பட 13 சட்டவிரோத
வங்கதேசிகளை தெற்கு நகர காவல் துறையினர், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு
அலுவலகம் மூலம் நாடு கடத்தினர்.இவர்களைத் தவிர 31 ஆப்பிரிக்க பிரஜைகளும் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.