அத்திப்பள்ளியில் சித்தேஸ்வரா மண்டபம் திறப்பு
அத்திப்பள்ளி: கர்நாடகா -- தமிழக மாநில எல்லையில் அத்திப்பள்ளியில் சித்தேஸ்வரா திருமண மண்டபம் திறக்கப்பட்டது. கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திறந்து வைத்தார்.கர்நாடகா- -- தமிழக எல்லையில் அத்திப்பள்ளி டி.வி.எஸ்., சாலையில் சித்தேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அறக்கட்டளை தலைவர் ராஜசேகர். ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரியும் ஆவார். சித்தேஸ்வரா கோவில் வளாகத்தில் புதிதாக சித்தேஸ்வரா என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மண்டபத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.கர்நாடக அறநிலையத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, புதிய மண்டபத்தை திறந்து வைத்தார். கோவிலில் உலக நன்மைக்காக நடந்த கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டார்.பின், ராமலிங்க ரெட்டி பேசியதாவது:சித்தேஸ்வரா கோவிலை தஞ்சை பெரிய கோவில் போன்று வடிவமைத்து உள்ளனர். ஊர்கள் தோறும் கோவில் அமைவது மிகவும் நல்லது.கோவில்கள் இருப்பது மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும். நமது மனம் சுத்தமாக இருக்கும். எண்ணங்களும் செயல்களும் வலிமை பெறும். சித்தேஸ்வரா பெயரிலேயே திருமண மண்டபம் கட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் பேசினார்.கோவில் அறக்கட்டளை தலைவர் ராஜசேகர் பேசியதாவது:சிவனின் தீவிர பக்தனாகி சித்தேஸ்வரா கோவிலை கட்டும் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன். தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும். சித்தேஸ்வரா திருமண மண்டபத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு திருமணம் நடைபெறும் போது, அவர்களுக்கு இலவச தங்கத் தாலி வழங்க உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.