லோக் ஆயுக்தாவில் வழக்குகள் நிலுவை அதிகரிப்பு
பெங்களூரு : 'முடா' வழக்கு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ததன் மூலம், கர்நாடக லோக் ஆயுக்தா தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. விசாரிக்க வேண்டியவழக்குகளின் எண்ணிக்கை கிடுகிடு என அதிகரிக்கிறது.கர்நாடக லோக் ஆயுக்தா, ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. மாநில அரசியலில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் திறன்கொண்டது. அன்றைய லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து, தாக்கல் செய்த அறிக்கை, பலரின் பதவியை பறித்தது. ஏ.சி.பி.,
சித்தராமையா முதல்முறை முதல்வரானபோது, லோக் ஆயுக்தாவின் அதிகாரத்தை பறித்து,ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்புப் படை அமைத்தார். அதன்பின் கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., அரசு இருந்தபோது, ஏ.சி.பி.,யை ரத்து செய்த உயர்நீதிமன்றம், லோக் ஆயுக்தாவுக்கு பழைய அதிகாரத்தை அளித்தது. இதனால் லோக் ஆயுக்தா பழைய 'கெத்து'டன் செயல்பட துவங்கியது.பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தவுடன் ஊழல் அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி, கையும், களவுமாக பிடிக்கிறது.கிலோக்கணக்கில்தங்கம், கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளது. சமீப நாட்களாக முக்கிய புள்ளிகள் மீது 44 வழக்குகள் பதிவாகி உள்ளன.வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, தேவராஜ் அர்ஸ் டிரக் டெர்மினல் ஊழலில் முன்னாள் எம்.எல்.சி., வீரய்யா உட்பட அரசியல் தலைவர்கள் மீது லோக் ஆயுக்தாவில் வழக்குப் பதிவாகியுள்ளது. தேசிய அளவில்...
சட்டவிரோத நில மறு அறிவிப்பு தொடர்பாக, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இதற்கிடையே முடா வழக்கு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது, லோக் ஆயுக்தா எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளது. இது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.லோக் ஆயுக்தாவில் பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்னும் 1,582 வழக்குகள் பாக்கியுள்ளன. இவற்றில் 41 வழக்குகளில் மட்டும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது.பல வழக்குகளில் குற்றவாளிகள் தப்புகின்றனர். லோக் ஆயுக்தாவில் பதிவான வழக்குகளின் விசாரணை தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார்தாரர்கள் மனமாற்றம்
லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறியதாவது:வழக்குகள் நீதிமன்றத்தில் பலவீனமடைய, புகார்தாரர்களே காரணம். புகார் அளித்த பின், விசாரணை நடத்தும்படி மன்றாடுகின்றனர். விசாரணையில் போலீசாரின் முன்னிலையில், அனைத்து தகவல்களையும் விவரிக்கின்றனர்.ஆனால் நீதிமன்றத்தில் அதை மாற்றிக் கூறுவதால் வழக்கு பலவீனமாகிறது. லஞ்சம் வாங்கி லோக் ஆயுக்தாவில் சிக்கும் அதிகாரிகள், புகார்தாரர்களின் கை, கால்களை பிடித்து அவர்களின் மனதை மாற்றுகின்றனர். ஆசை வார்த்தைகள் காண்பித்து, புகாரை திரும்பப் பெறவைக்கின்றனர்.நீதிபதியின் முன்னால், முன்னுக்குப்பின் முரணாக புகார்தாரர்கள் பேசுகின்றனர். இது போன்ற காரணங்களால், குற்றவாளிகளுக்கு தண்டனை குறைகிறது. மற்றொரு பக்கம் ஊழியர் பற்றாக்குறையும், லோக ஆயுக்தா விசாரணைக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. மக்களின் மனநிலை மாறினால், குற்றவாளிகளுக்கு தண்டனை அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.