உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - சீனா எல்லை பிரச்னை பேச்சு வெற்றி; முட்டுக்கட்டை நீங்கியதாக சீன அமைச்சர் மகிழ்ச்சி

இந்தியா - சீனா எல்லை பிரச்னை பேச்சு வெற்றி; முட்டுக்கட்டை நீங்கியதாக சீன அமைச்சர் மகிழ்ச்சி

புதுடில்லி: இந்தியா - சீனா இடையே கடந்த காலங்களில் நீடித்த முட்டுக்கட்டைகள் தற்போது நீங்கியிருப்பதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். அதே போல, எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சு வெற்றியடைந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து வர்த்தகம், பொருளாதாரம், புனித யாத்திரை, மக்களிடையே நேரடி தொடர்பு ஏற்படுத்துதல், எல்லை வர்த்தகம், இருதரப்பு உறவுகள் ஆகியவை குறித்த பேச்சுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித் திருந்தார். இந்நிலையில், எல்லை பிரச்னை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், வாங் யீ பேச்சு நேற்று நடத்தினார்.

எல்லையில் அமைதி அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை குறித்து, 24வது சுற்று பேச்சுக்காக இங்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட முட்டுக்கட்டை தேவையற்றது. இரு நாடுகளுமே அதை விரும்பவில்லை. நீண்ட காலமாக நீடித்த சிக்கல் தற்போது நீங்கிவிட்டது. ரஷ்யாவின் கசானில் கடந்த ஆண்டு நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்தித்து பேசியதை அடுத்து, இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு மீண்டும் துளிர்விட்டுள்ளது. அதன் பலனாக எல்லைகளில் மீண்டும் அமைதி நிலவ ஆரம்பித்திருக்கிறது. 75 ஆண்டுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்காக, சீனா வரும் பிரதமர் மோடியை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா - சீனா இடையே ஆரோக்கியமான நல்லுறவு நீண்ட காலத்திற்கு நீடித்தால் மட்டுமே இரு நாடு களுக்கும் பயன் தரும் என்பதை வரலாறும், யதார்த்தமும் நிரூபித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது பேசிய நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கசானில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த பின், இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் ஏற்பட்டு வருவதாக அடிக்கோடிட்டு காட்டினார். முக்கியமாக, கடந்த ஒன்பது மாதங்களாக எல்லையில் அமைதி மட்டுமே நிலவுகிறது என தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

இரு நாட்டு எல்லை பிரச்னை தொடர்பான பேச்சு, கடந்த முறை போலவே வெற்றியுடன் முடிந்திருக்கிறது. இந்தியா - சீனா இடையே துாதரக உறவு மலர்ந்து, 75 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த தருணத்தில், நம் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டுக்காக, வரும் 31ம் தேதி சீனா செல்கிறார். இத்தகைய சூழலில், எல்லை பிரச்னை தொடர்பான பேச்சு வெற்றி அடைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. நல்லுறவு இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையில் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து, இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சின்போது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன. தற்போது கிழக்கு லடாக் பகுதியில், இரு நாடுகளின் சார்பிலும் 50,000 முதல் 60,000 வீரர்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியா - சீனா இடையே மீண்டும் நல்லுறவு மேம்பட்டு வருவதால், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சீனா மீண்டும் அனுமதி அளித்துள்ளது. அதே போல் சீனர்களுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்குவதை இந்தியா மீண்டும் துவங்கியுள்ளது. 0இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருடன் சந்திப்பு

டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து தன் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இந்தியா - சீனா இடையிலான உறவு நிலையாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர நலனுக்கு மதிப்பளிக்க முடிவெடுத்துள்ளன. இதனால், கடந்த 10 மாதங்களாக இரு நாட்டு உறவும் சீரடைந்து வருகிறது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பு மகிழ்ச்சியை தருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிற்கு இடையே, சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடனான அடுத்த சந்திப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்தியா - சீனா இடையிலான நிலையான, ஆக்கப்பூர்வமான நல்லுறவு பிராந்திய வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

கட்டுப்பாடுகளை நீக்கியது சீனா

ராபி பருவ பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் அமோனியம் பாஸ்பேட் உரம் கிடைப்பதில் பாதிப்பு, சீனாவில், வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களின் ஏற்றுமதி நிறுத்தி வைப்பு, அரியவகை காந்தங்கள் மற்றும் தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகளால், இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு தொழில் துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இடம், இப்பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் சீன சென்றபோது இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இந்தியா விடுத்த கோரிக்கையை சீனா ஏற்றுக்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சர் தற்போது உறுதியளித்துள்ளார். சீனாவில் இருந்து, இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு உறுதி

தைவான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசுமுறை பயணமாக டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, சீனாவின் அங்கம்தான் தைவான் என்பதை ஏற்றுக் கொள்வது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார். இதனால், இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், உடனடியாக அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தைவானுடன் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ரீதியிலான தொடர்பு நமக்கு இருக்கிறது. எனவே, தைவான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற உலக நாடுகளை போலவே, தைவானுடனும் நல்லுறவை வளர்க்கவே இந்தியா விரும்புகிறது என, சீன வெளியுறவு அமைச்சரிடம் அழுத்தமாக சொல்லப்பட்டு விட்டது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
ஆக 20, 2025 14:58

கடந்த மாதம் "சீன" சென்றபோது இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இந்தியா விடுத்த கோரிக்கையை சீனா ஏற்றுக்கொண்டதாக... காலில்லாத "சீனா"வின் பிழையை கவனிக்கவும் அய்யா


Sekar
ஆக 20, 2025 10:12

அரசியலில் நிரந்தர நண்பன் மற்றும் எதிரி என யாருமில்லையென்றாலும் சீன இறக்குமதி பொருட்கள் குறிப்பாக உரங்கள் தரம் ஆய்வு செய்து பின்பு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மிக விரைவில் நமக்கு தேவையான பொருட்களை நாமே தயாரிக்க வேண்டும் எதற்கும் வெளிநாடுகளில் எதிர்பார்க்க கூடாது.


அப்பாவி
ஆக 20, 2025 08:29

கண்ணாடி மாளிகையில் பேசி கல்வானில் வீரர்களை இழந்ததற்கு வருந்தி முடிச்சாச்சு. இனிமே புதுசா வருந்தணும்லா.


vivek
ஆக 20, 2025 10:29

கேடுகெட்ட பிறப்பு


Shivakumar
ஆக 20, 2025 06:14

இந்தியா இனிமேல் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்தியா - சீனா எல்லை பிரச்னை பேச்சு வெற்றி பெற்றாலும் நமது எல்லைகளில் சீனாவின் அத்துமீறல் இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்கள், பூச்சி மருந்து இவைகளை நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யவேண்டும். அமெரிக்காவும், சீனாவையும் எப்போதுமே நம்பக்கூடாது. சமயம் பார்த்து முதுகில் குத்துவதில் வல்லவர்கள்.


சிட்டுக்குருவி
ஆக 20, 2025 03:49

சீனாவும் இந்தியாவும் பரஸ்பர நல்லெண்ணத்தோடு இணைந்திருந்தகால் உலக அமைதிக்கு வழிவகுக்கும் .சீன தைவானை இணைக்கும் எண்ணத்தை கைவிட்டு நாடக அங்கீகரித்து நட்புடன் முன்மாதிரியாக இருப்பதால் உலகுக்கு நன்மைபயக்கும் .சீனாவுக்கு கிழக்கு ஒரு கடினமான நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றது .அது திருமணம் செய்துகொள்ளாமை ,ஜனத்தொகை குறைவு ஜப்பான், தென்கொரியாவில் .அது சீனாவுக்கு பரவிக்கொண்டிருக்கின்றது .ஒவ்வொரு ஆண்டும் சீனாவின் ஜனத்தொகை ஒருகோடிவீதம் குறைந்து நூறு ஆண்டுகளில் 40 கோடி ஆகும் என்று அறியப்படுகின்றது .அதனால் சீனாவில் ஆட்களே இல்லாத பேய்நகரங்கள் அதிகமாக காணப்படும் .இதை அறிந்து சீன இப்போது ரோபோ மூலம் குழந்தைப்பேற்றுவளர்க்க ஆராயிச்சிகள் செய்துவருகின்றார்கள் .இனிவரும் காலங்களில் சீன ஆகிராமிப்பது எண்ணங்களை விட்டொழித்து எல்லாநாடுகளிடமும் ஒற்றுமைகாட்டி உலகுக்கு வழிகாட்டியாக இருப்பதே நன்று .


Kasimani Baskaran
ஆக 20, 2025 03:49

சீனாவை என்றுமே நம்பமுடியாது என்ற அடிப்படை கோட்பாட்டை விட்டு வெளியே வருவது சரியல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை