| ADDED : நவ 06, 2025 06:49 AM
புதுடில்லி: இந்தோ-பசிபிக் பகுதியில் மூலோபாய நிலைப்புத்தன்மையை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியா-ஜப்பான் உறவுகள் மாபெரும் பங்களிப்பை வழங்குவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லி பாலிசி குரூப் மற்றும் ஜப்பான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் அபேர்ஸ் இணைந்து நடத்திய இந்தியா-ஜப்பான் இந்தோ-பசிபிக் மாநாட்டில் அவர் உரையாற்றினார். அவர் கூறியதாவது; கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - ஜப்பான் இடையிலான உறவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. முன்பை விட தற்போது மதிப்புகள் உயர்ந்துள்ளன. இந்தோ-பசிபிக்கில் மூலோபாய நிலைப்புத்தன்மையை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய மட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பங்களிக்கிறது. சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியைப் பேணுவது அவசியமாகும். ஆனால் அது மிகவும் சவால் நிறைந்தது. ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி பதவியேற்ற போது, பிரதமர் மோடி நடத்திய தொலைபேசி உரையாடல், இரு தரப்பினரும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு சான்றதாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், முக்கிய கனிமங்கள் மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இரு முக்கிய ஜனநாயக மற்றும் கடல்சார் நாடுகளாக இந்தோ-பசிபிக் பகுதிக்கு இந்தியா மற்றும் ஜப்பான் அதிக பொறுப்பைக் கொண்டுள்ளன.இருநாடுகளிடையே மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும், எங்கள் உறவின் மூலோபாய மற்றும் விரிவான தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன, இவ்வாறு அவர் கூறினார்.