| ADDED : செப் 11, 2024 01:15 PM
நொய்டா: 'உலகில் உள்ள ஒவ்வொரு சாதனங்களிலும் இந்தியாவில் தயாரான 'சிப்'கள் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.உ.பி.,யின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த செமி கண்டக்டர் துறை சார்ந்த மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: உலகளவில், வடிவமைத்தல் துறையில் 20 சதவீத திறமையாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். இது இன்னும் அதிகரித்து வருகிறது. செமி கண்டக்டர் துறையில் 85 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களை தயார்படுத்தி வருகிறோம். 'சிப்'கள் கொள்முதலில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. இதன் மூலம் உலகின் சிறந்த பொது கட்டமைப்பைஉருவாக்கி உள்ளோம். இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும். உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரான சிப் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.இந்தியாவில், செமி கண்டக்டர் துறையில் புரட்சி ஏற்படும் விளிம்பில் உள்ளது. இத்துறையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், நவீன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.நாட்டில் 'சிப்'களின் உற்பத்தியை அதிகரிப்பதே இந்தியாவின் தாரக மந்திரம். செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளோம். மத்திய அரசும் ஆதரவு அளிக்கிறது.அரசின் கொள்கைகளால் 1.5 டிரில்லியன் முதலீடு வந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.