இந்திய மாணவர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் மீண்டும் விபரீதம்
ஹைதராபாத்,: அமெரிக்காவில், மேல் படிப்பிற்காக சென்ற இந்திய மாணவர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் ரவி தேஜா, 26. இவர், தன் மேல் படிப்பிற்காக கடந்த 2022ல் அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு சென்றார். விரைவில் தன் படிப்பை நிறைவு செய்ய இருந்த நிலையில், அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றவும் திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், ரவி தேஜாவை அங்குள்ள எரிவாயு நிலையத்தில், மர்ம நபர்கள் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். தகவலறிந்து வந்த போலீசார், ரவி தேஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எதற்காக அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர் என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துடன், தப்பியோடிய நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற ரவி தேஜா சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.கடந்த மாதம், தெலுங்கானாவைச் சேர்ந்த சாய் தேஜா என்ற மாணவர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.