இண்டிகோ விமானத்தில் எல்லோரையும் கிலி பிடிக்க வைத்த எலி!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கான்பூர்: இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமான பயணம் 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; கான்பூரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் மொத்தம் 140 பயணிகளும் விமானிகள் மற்றும் சிப்பந்திகளும் இருந்தனர். அப்போது விமானத்தில் எலி ஒன்று அங்கும், இங்கும் ஓடியதை பயணி ஒருவர் கண்டுள்ளார். உடனடியாக அவர் சக பயணிகளுக்கும், விமானத்தின் சிப்பந்திகளுக்கும் விவரத்தை தெரிவித்தார்.அவர்களும் எலி நடமாட்டத்தை உறுதி செய்து விமானிகளிடம் கூறினர். இதையடுத்து, உடனடியாக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர். அதன் பின்னர், விமானத்தின் உள்ளே சென்ற பணியாளர்கள் எலியை பிடிக்க ஆயத்தமாகினர். எலி அங்கும்,இங்கும் போக்கு காக்க, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கடந்தும் எலியை அவர்களால் பிடிக்க முடியவில்லை. நீண்ட முயற்சிக்கு பின்னர், எலி ஒருவழியாக சிக்கியது.அதன் பின்னர், விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பிறகு 3 மணி நேரம் தாமதமாக விமானம் கான்பூரில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான பயணம் தாமதம் ஆவது உண்டு. ஆனால் ஒரு எலி, எல்லோரையும் கிலி பிடிக்க வைத்தது, ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.