உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து குளறுபடிகளுக்கும் இண்டிகோ நிறுவனமே காரணம்; பார்லி.யில் அமைச்சர் குற்றச்சாட்டு

அனைத்து குளறுபடிகளுக்கும் இண்டிகோ நிறுவனமே காரணம்; பார்லி.யில் அமைச்சர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திட்டமிடலில் இண்டிகோ விமான நிறுவனம் ஏற்படுத்திய தவறுகளே அனைத்து குளறுபடிகளுக்கு காரணம். பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லை என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு திட்டவட்டமாக கூறி உள்ளார்.அண்மையில் விமானிகளுக்கான புதிய நேர கட்டுப்பாட்டு விதிகள்( Flight Duty Time Limit- FDLT) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் முடங்கின.ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவித்து போயினர். ஆங்காங்கே இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்து விமான பயணிகள் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.இது தொடர்பாக ராஜ்ய சபாவில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதில் அளித்தார். அவர் தமது உரையில் கூறியதாவது; இந்த குளறுபடிகளுக்கு இண்டிகோ நிறுவன விமானிகள், அதன் பணியாளர்களின் அட்டவணை, உள் திட்டமிடல் போன்றவற்றில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் ஆகும். பணி நேர கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக தெளிவு பெற, இண்டிகோ நிறுவனத்துடன் நடைபெற்ற ஆலோசனையின் போது அந்த நிறுவனம் எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.எல்லாம் சாதாரணமாகவே இயங்கி கொண்டு இருந்தது. திடீரென டிச.3ம் தேதி இந்த பிரச்னையை நாங்கள் கவனித்தோம். மத்திய அமைச்சகம் உடனடியாக தலைவிட்டது. நிலைமையை கட்டுப்படுத்தினோம்.விமான புறப்பாடில் தாமதங்கள், ரத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் பயணிகளை பாதுகாக்க கடுமையான விமான போக்குவரத்து விதிகள் நடைமுறையில் உள்ளன. விமான நிறுவனங்கள் இதை பின்பற்ற வேண்டும்.மென்பொருள் பிரச்னை பற்றி, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விமான போக்குவரத்து துறை உலகளாவிய தர நிலைகள் கொண்டிருக்க வேண்டும் என்பதே அரசின் தொலைநோக்கு பார்வையாகும். இண்டிகோவில் உள்ள சிக்கல்கள், பணியாளர்கள் பட்டியல் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடுதல் தொடர்பானவை ஆகும். இவற்றை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் அன்றாடம் நிர்வகிக்கும் பொறுப்பை கொண்டுள்ளன. விமானிகளுக்கான புதிய நேர கட்டுப்பாட்டு விதிகளை எந்தவொரு நிறுவனமும் பின்பற்ற வில்லை என்றால் கடுமையான நடவடிக்கையை எடுப்போம், இதில் சமரசம் கிடையாது.பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.569 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதிய உள்ளுர் விமான கட்டண விகிதங்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை