பீன்யா மேம்பாலத்தை பலப்படுத்தும் பணி தீவிரம்
பெங்களூரு; துமகூரு சாலையில் உள்ள, பீன்யா மேம்பாலத்தை மேலும் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 1,400 கேபிள்களில், 700 கேபிள்கள் மாற்றப்பட்டுள்ளன.இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், பெங்களூரு பிரிவு இயக்குனர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு - துமகூரு சாலையில் உள்ள, பீன்யா மேம்பாலத்தின் எட்டாவது மைல் ஜங்ஷன் அருகில் 102வது பில்லர் மற்றும் 103வது பில்லரில், கேபிள்கள் சாய்ந்தன. இதை சரி செய்வதற்காக, 2021 டிசம்பரில் இருந்து வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.அதன்பின் வல்லுனர்கள் பில்லர்களை ஆய்வு செய்து, இலகு ரக வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பஸ்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.அதன்பின் 120 பில்லர்களில், 240 கேபிள்களை மாற்றி நடப்பாண்டு ஜூலை 29ல் இருந்து, அனைது விதமான வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது துருப் பிடித்த 1,400 கேபிள்களை மாற்றும் பணிகள் நடக்கின்றன. இவற்றில் 700 கேபிள்கள் மாற்றப்பட்டுள்ளன. தாசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகில், பணிகள் நடக்கின்றன.வரும் 2025 மார்ச் இறுதியில், பணிகள் முடிவடையும். நான்கு குழுக்கள் துரிதமாக பணியில் ஈடுபட்டுள்ளன. ஆசியாவிலேயே மிக பெரியதான பீன்யா தொழிற்பகுதி, இந்த மேம்பாலத்தின் பக்கத்திலேயே உள்ளது. தொழிற்பகுதிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான டிரக்குகள் வருகின்றன.மாநிலத்தின் 21 மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இதே மேம்பாலம் இணைப்பு ஏற்படுத்துகிறது. எனவே பாலத்தை பலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்கு முன் பொருத்தப்பட்ட கேபிள்களை விட, இப்போது நீண்ட ஆயுட்காலம் கொண்ட, உயர்தரமான கேபிள்கள் பொருத்தப்படுகின்றன. இத்தகைய கேபிள்கள் நாட்டின் எந்த மேம்பாலத்திலும் இல்லை.வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல், சனிக்கிழமை காலை 6:00 மணி வரை, பீன்யா மேம்பாலத்தில் கனரக வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை, இப்போதும் தொடர்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.