வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த நீதி வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.நீதி மன்றங்கள் ஆவண சாட்சியங்களை புறக்கணித்து ஆள் பலம் பண பலம் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்குவதால் இந்நிலை.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, இவரது அண்ணன் மல்லிகார்ஜுன் சாமி, நிலம் கொடுத்த தேவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிய, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, சித்தராமையா உட்பட நான்கு பேர் மீதும் மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் முதல் குற்றவாளியாக, சித்தராமையா பெயர் சேர்க்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜன., 27ல் தீர்ப்பு
இதற்கிடையில், லோக் ஆயுக்தா விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை. முதல்வர் மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்றத்தில் சிநேகமயி கிருஷ்ணா மனு செய்தார். அந்த மனு மீது விசாரணை முடிந்து, வரும் 27ம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது. எனவே, அதற்கு முந்தைய நாள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும், லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மைசூரு முடா அலுவலகத்தில் நேற்று முன்தினம், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி, சில ஆவணங்களையும் எடுத்து சென்றிருந்தனர். இந்நிலையில் லோக் ஆயுக்தா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள அறிக்கையில், சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் கிடைத்ததில், சித்தராமையாவுக்கும், அவரது மனைவி பார்வதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், முதல்வரும், அவரது மனைவியும் இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் என்றும் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், வீட்டுமனை கொடுத்ததில் அதிகாரிகள் தவறு இருப்பதாகவும், அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடர்வது பற்றி சட்டரீதியாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.முடாவுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 50க்கு 50 திட்டத்தின் கீழ், மனை வழங்குவது குறித்து முடா அதிகாரிகள் நடத்திய முதல் கூட்டத்தின் ஆடியோ உரையாடலை, லோக் ஆயுக்தா கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சித்தராமையாவிடம் கேட்ட போது, ''லோக் ஆயுக்தா அறிக்கையில் என்ன உள்ளது என்று எனக்கு தெரியாது,'' என்றார். மனசாட்சி
புகார்தாரர் சிநேகமயி கிருஷ்ணா அளித்த பேட்டி:எனக்கு தெரிந்து முதல்வர் குற்றமற்றவர் என்று, லோக் ஆயுக்தா அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி அறிக்கை தாக்கல் செய்தால் கூட, முதல்வர் என்னென்ன தவறுகள் செய்தார் என்ற ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அதை நீதிமன்றத்தில் கொடுப்பேன்.அதிகாரிகள் மீது பழி போட்டு, முதல்வரை தப்பிக்க வைக்க பார்க்கின்றனர். அது எப்படி பார்வதியின் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் மட்டும் அதிகாரிகள் தவறு செய்வர். லோக் ஆயுக்தா, முதல்வரின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனக்கு முன்பே தெரியும். இதுபோன்று ஏதாவது அறிக்கை கொடுப்பர் என்று. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இதற்கு தான் முன்பு இருந்தே, லோக் ஆயுக்தா விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி வருகிறேன். மனசாட்சிக்கு எதிராக லோக் ஆயுக்தா அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதிகாரிகள் சும்மா தவறு செய்ய மாட்டார்கள். வீட்டுமனை ஒதுக்கப்பட்டதில் சித்தராமையா தரப்பில் இருந்து, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. லோக் ஆயுக்தா இன்னும் எத்தனை அறிக்கை தாக்கல் செய்து, முதல்வர் குற்றமற்றவர் என்று கூறினாலும், என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து, சித்தராமையாவுக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் விட மாட்டேன். என் போராட்டத்தை நிறுத்த மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நீதி வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.நீதி மன்றங்கள் ஆவண சாட்சியங்களை புறக்கணித்து ஆள் பலம் பண பலம் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்குவதால் இந்நிலை.