துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா டில்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று முன்தினம் மதியம் வரை ராஜ்யசபா அலுவல்களில் ஆர்வம் காட்டி வந்த தன்கர், திடீரென இந்த முடிவை எடுக்க என்ன காரணம்? இடைப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் என்ன நடந்தது? என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதற்கிடையே, அடுத்த துணை ஜனாதிபதியாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. சரியாக, 13 நாட்களுக்கு முன், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்தீப் தன்கர், '2027 ஆகஸ்ட் வரை துணை ஜனாதிபதி பதவியில் தொடர்வேன்' என தெரிவித்திருந்தார். ஆனால், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அந்த முடிவில் இருந்து விலகி, திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தது, டில்லி அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=prz9dnt4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன்கருக்கு இதய நோய் இருப்பது உண்மையே. ஆனால், திடீரென ராஜினாமா செய்யும் அளவுக்கு அவரது மனம் மாறியதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. காரணம் 1
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை அடுத்த துணை ஜனாதிபதியாக பதவியில் அமரவைக்க பா.ஜ., காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பீஹார் சட்டசபைக்கு தேர்தல் வருவதால், தங்கள் கட்சி வேட்பாளரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. இந்த நகர்வால் நிதிஷ் குமார் உடனான உறவு கசந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவரை துணை ஜனாதிபதி பதவியில் அமரவைத்து அழகு பார்க்க பா.ஜ., முயல்வதாக கூறப்படுகிறது. அதை உறுதிபடுத்துவது போல பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிபூஷண் தாகூரின் பேட்டியும் அமைந்திருக்கிறது. “துணை ஜனாதிபதியாக நிதிஷ் குமார் நியமிக்கப்பட்டால் பீஹாருக்கு நிச்சயம் நல்லது நடக்கும்,” என அவர் பேசியிருப்பது எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றி இருக்கிறது. காரணம் 2
நேற்று முன்தினம் நடந்த ராஜ்யசபா அலுவல் ஆய்வுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்காமல், தன்கரை அவமதித்ததே இரண்டாவது காரணமாக கூறப்படுகிறது. பணமூட்டை சிக்கிய விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்குவதற்கு, எதிர்க்கட்சிகளை சேர்ந்த 68 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு தன்னிடம் நோட்டீஸ் வழங்கியதாக தன்கர் கூறியிருந்தார். ஒருவேளை எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீஸின் அடிப்படையில், தன்கர் முடிவெடுத்திருந்தால், இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் தீர்மானம் கொண்டு வர எண்ணியிருந்த மத்திய அரசுக்கு கவுரவ குறைச்சலாக மாறியிருக்கும். எனவே, தன்கர் கூட்டிய ராஜ்யசபாவின் முக்கியமான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல், மத்திய அமைச்சர்கள் நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் புறக்கணித்தனர். தவிர, ஆய்வுக் கூட்டம் முடிந்த பின், மிக மிக முக்கியமான இடத்திலிருந்து, ஜக்தீப் தன்கருக்கு போன் வந்ததாக தெரிகிறது. அப்போது நடந்த உரையாடல், சற்று காரசாரமாக இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஆளும் தரப்பு ஆதரவுடன், ஜக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமே கொண்டு வரும் அளவுக்கு அடுத்தடுத்த ஆலோசனைகள் தீவிரமடையத் துவங்கியதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ஜக்தீப் தன்கர், தனக்கான சூழ்நிலைகள் மாறுவதை, சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதவிநீக்கம் என்ற நிலைமைக்கு செல்லும் வரை காத்திருக்காமல், ராஜினாமா செய்துவிடும் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. மேலும், ராஜ்யசபா கூடியபோது, ஆப்பரேஷன் சிந்துார் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, சபை குறிப்பில் தான் கூறுவது மட்டுமே பதிவாகும் என நட்டா பேசியதும், சபை தலைவர் என்ற முறையில் தன்கரை புண்படுத்தியதாக கூறப்படுகிறது. காரணம் 3
தன்கர் சமீபகாலமாக, நீதித்துறை மீது விமர்சனங்களை முன்வைத்து வந்த தும் ஆட்சியாளர்களை அதி ருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த தன்கர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ராஜினாமா ஏற்பு தன்கரின் ராஜினாமாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதை உள்துறை அமைச்சகமும் அரசிதழில் வெளியிட்டது. ஜக்தீப் தன்கர் இனி மீண்டும் பார்லிமென்ட்டிற்கு வர வாய்ப்பில்லை. ஓய்வு பெறும்போது, பிரிவு உபசார உரை நிகழ்த்துவது வழக்கம்; எம்.பி.,க்களும், வாழ்த்திப் பேசுவது வழக்கம். ஜக்தீப் தன்கர், பார்லிமென்ட்டுக்கு நேற்று வரவில்லை. எனவே, ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், அவர் மீண்டும் பார்லிமென்ட் வருவது சந்தேகமே. எனவே, பிரிவு உபசார உரை நிகழ்த்தவும், அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், எம்.பி.,க்கள் வாழ்த்தி பேசுவதற்கும் இனி வாய்ப்பில்லை.துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு பதவிகளில் நம் நாட்டிற்கு சேவை செய்ய ஜக்தீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். -நரேந்திர மோடி, பிரதமர்மகிழ்ச்சி! அடுத்த துணை ஜனாதிபதி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். பீஹாரைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் எனக்கு மகிழ்ச்சி. பிரேம் குமார் பீஹார் அமைச்சர், பா.ஜ.,
2வது நாளிலும் அமளி
லோக்சபா, ராஜ்யசபாவில் நேற்றும் அலுவல்கள் நடக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதால், கேள்வி நேரம் மற்றும் ஜீரோ நேரம் உள்ளிட்ட அலுவல்கள் முற்றிலுமாக வீணாகின. பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டு, சபைகளை முடக்கினர்.
அடுத்து என்ன?
அரசியலமைப்பு சட்டப்படி, மரணம், ராஜினாமா, பதவி நீக்கம் அல்லது வேறு சில காரணங்களால், துணை ஜனாதிபதி பதவி காலியாகும் போது, முடிந்தவரை விரைவில் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய காலக்கெடு இல்லை. தேர்வு செய்யப்படும் நபர், பதவியேற்கும் நாளிலிருந்து முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். எனினும், துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது கடமைகளை யார் செய்வார் என்பது குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
சந்தேகம் கிளப்பும் காங்.,
காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: ஜக்தீப் தன்கர் தலைமையில், நேற்று முன்தினம் மதியம் 12:30 மணி-க்கு ராஜ்யசபா அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறிது விவாதத்துக்கு பின், மாலை 4:30 மணிக்கு மீண்டும் ஆய்வுக் குழு கூடியது. ஆனால் இதில், நட்டா, ரிஜிஜு பங்கேற்க வில்லை. இது குறித்து தகவலும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்த ஜக்தீப் தன்கர், அதிருப்தி அடைந்து கூட்டத்தை ஒத்தி வைத்தார். மதியம் 1:00 - 4:30 மணி வரை என்ன நடந்தது என்பது தீவிரமான விஷயம். மேலும், கூட்டத்தை வேண்டுமென்றே நட்டா, ரிஜிஜு புறக்கணித்துள்ளனர். நீதித் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை ராஜ்யசபாவில் ஜக்தீப் தன்கர் வெளியிட இருந்தார். அவரது திடீர் ராஜினாமா அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதை திட்டவட்டமாக மறுத்த பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா, ''முக்கிய அலுவல்கள் இருந்ததாலேயே, ஆய்வுக் குழு கூட்டத்திற்கு வர முடியவில்லை. இந்த தகவலை, ஜக்தீப் தன்கர் அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவித்து விட்டோம்,'' என்றார்.
ராஜினாமா ஏற்பு
தன்கரின் ராஜினாமாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதை உள்துறை அமைச்சகமும் அரசிதழில் வெளியிட்டது. ஜக்தீப் தன்கர் இனி மீண்டும் பார்லிமென்ட்டிற்கு வர வாய்ப்பில்லை. ஓய்வு பெறும்போது, பிரிவு உபசார உரை நிகழ்த்துவது வழக்கம்; எம்.பி.,க்களும், வாழ்த்திப் பேசுவது வழக்கம். ஜக்தீப் தன்கர், பார்லிமென்ட்டுக்கு நேற்று வரவில்லை. எனவே, ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், அவர் மீண்டும் பார்லிமென்ட் வருவது சந்தேகமே. எனவே, பிரிவு உபசார உரை நிகழ்த்தவும், அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், எம்.பி.,க்கள் வாழ்த்தி பேசுவதற்கும் இனி வாய்ப்பில்லை. - நமது டில்லி நிருபர் -