உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் சர்ச்சை!

மீண்டும் சர்ச்சை!

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் நடந்த மாநாட்டில், நம் நாட்டுக்கு எதிராக, ஐரோப்பிய சோஷியலிச கட்சியை பேச வைத்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கைத்தட்டி ரசித்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ‘ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு நீங்கள் பாடம் எடுக்காதீர்கள்’ என, ஐரோப்பிய சோஷியலிச கட்சிக்கு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூட்டணி கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுதும் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ், திரிணமுல் காங்., சமாஜ்வாதி அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றன. ‘ஓட்டு திருட்டு’ என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆட்சியில் உள்ள தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் அக்கட்சி சார்பில், ‘பாரத் மாநாடு’ என்ற பெயரில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கூட்டம் நடந்தது. இதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் இடதுசாரி மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளை உள்ளடக்கிய பன்னாட்டு அரசியல் கூட்டமைப்பான, ஐரோப்பிய சோஷியலிச கட்சியின் பொதுச் செயலர் கியாகோமோ பிலிபெக்கும் பங்கேற்றார். இத்தாலியை சேர்ந்த கியாகோமோ பிலிபெக், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிராக காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டங்களுக்கு இம்மாநாட்டில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ‘ஒரு நபர்; ஒரு ஓட்டு’ என்ற ஜனநாயக கொள்கையை ராகுல் பாதுகாப்பதாகவும், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் விமர்சித்தார். கியாகோமோ பிலிபெக்கின் இந்த கருத்துக்கு, ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கட்சியுடன் கூட்டணியில் உள்ள போர்சா இத்தாலியா கட்சி துணை பொதுச் செயலர் டெபோரா பெர்காமினி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் 97 கோடி மக்கள் ஓட்டளிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். அப்படியான ஒரு தேசத்திற்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பது முறையற்றது. தனக்கென ஜனநாயக அமைப்புகள், சுதந்திரமான நீதித்துறையும் கொண்ட நாடு இந்தியா,’’ என்றார். நம் நாட்டை விமர்சித்து கியாகோமோ பிலிபெக் பேசியபோது, மேடையில் இருந்த காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சிரித்தபடி கைத்தட்டினார். இது தொட்பான வீடியோ வெளியான நிலையில், வெளிநாட்டு தலைவர்களை அழைத்து வந்து நம் நாட்டை அவமதிப்பதாக ராகுல் மீது பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், ‘‘நம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட எந்தவொரு வெளிநாட்டு தலைவருக்கும் உரிமை கிடையாது. உள்நாட்டு அரசியலுக்குள், வெளிநாட்டு தலைவர்களை காங்கிரஸ் இழுத்து வருகிறது,’’ என குற்றஞ்சாட்டினார். நம் நாட்டின் ஜனநாயகத்தை, வெளிநாட்டு தலைவர்கள் கேலி செய்ய ராகுல் அனுமதித்துவிட்டார் என தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் ராம்சந்தர் ராவும் விமர்சித்துள்ளார்.

சரிப்பதை பார்த்திருக்கிறீர்களா?

ஒரு வெளிநாட்டவரால், இந்தியா அவமதிக்கப்படும்போது, யாராவது சிரிப்பதை, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இந்தியாவை அவமதிக்க, எந்த இந்தியர், வெளிநாட்டிற்குச் செல்கிறார் என்று, நான் கேட்கவில்லை.- கிரண் ரிஜிஜுமத்திய அமைச்சர், பா.ஜ.,

விசா விதிகளை

மீறிய பிலிபெக்ஐரோப்பிய சோஷியலிச கட்சியின் பொதுச் செயலர் கியாகோமோ பிலிபெக், விசா விதிகளை மீறிவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘பாரத் மாநாட்டில்’ பங்கேற்க வந்த பிலிபெக், கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளில் பங்கேற்கும், ‘மாநாட்டு விசா’வில் தான் நம் நாட்டிற்கு வந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் எந்த விசாவில் வந்தாலும், நம்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பது விதி. நம் நாட்டின் ஜனநாயகம், தேர்தல் முறைகள் குறித்து பேசி, அந்த விதியை பிலிபெக் மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

ராகுல் தேசவிரோத தலைவர்

பா.ஜ., கடும் பாய்ச்சல்‘ஹைதராபாதில், ‘பாரத் மாநாடு’ நடத்தி, வெளிநாட்டு மற்றும் தேச விரோத சக்திகளுக்கு, ராகுல் மேடை அமைத்துக் கொடுத்ததோடு, நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டார்’ என பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் பாத்தியா கூறியதாவது:ஹைதராபாதில் நடந்த மாநாட்டை, ‘தேச விரோத மாநாடு’ என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். ராகுல், தேச விரோத சக்திகளை ஒன்றிணைக்கிறார். எந்தவொரு மேடையையும் விட்டுவைக்காமல் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார். நாட்டில் குழப்பம் மற்றும் ஸ்திரமின்மையை உருவாக்கவும் முயற்சிக்கிறார். தேசத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டார். தேச நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் மேடையாக அது மாற்றப்பட்டது. ஒரு வெளிநாட்டுக்காரர், இந்திய மண்ணில் நின்றுகொண்டு, நாட்டின் மக்கள் தீர்ப்பைக் கேலி செய்வது, துரதிர்ஷ்டவசமானது. இதன்மூலம், ராகுல் ஒரு தேச விரோத எதிர்க்கட்சித் தலைவர் என்பது உறுதியாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !