உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ., சகோதரர்; அதிகாரம் படைத்தவருடன் மோதியதால் சிக்கல்

சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ., சகோதரர்; அதிகாரம் படைத்தவருடன் மோதியதால் சிக்கல்

துாத்துக்குடி: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் உடன்பிறந்த அண்ணன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் அண்ணன் கைது பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா அயிரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 57. தொழிலதிபரான இவரது உடன்பிறந்த தம்பி சண்முகையா, 2019 முதல் ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார். ஓட்டப்பிடாரம் பகுதியில் காற்றாலை, சோலார் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கி கொடுக்கும் தொழிலில் முருகேசன் ஈடுபட்டு வந்தார்.

நீக்கம்

அ.தி.மு.க., விசுவாசியான முருகேசன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். 2019ல் நடந்த சட்டசபைக்கான இடைத்தேர்தலில், அவரது தம்பி சண்முகையா தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அவருக்கு மறைமுகமாக உதவினார் என்பதற்காக, அ.தி.மு.க.,வில் இருந்து முருகேசன் நீக்கப்பட்டார்.இந்நிலையில், கடந்த மார்ச்சில் சோலார் நிறுவனத்திற்காக, தாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு நிலம் வாங்கி கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மாரிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில், ஓட்டப்பிடாரம் போலீசார், முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்; நீதிமன்றத்தில் அறிக்கை அளித்து, வழக்கை முடித்து வைத்தனர். இருந்தபோதும், மாரிமுத்து, முருகேசன் இடையே மோதல் தொடர்ந்தது. மாரிமுத்துவின் மனைவி முத்து மாடத்தியை ஆபாச வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக சமீபத்தில் வழக்குப்பதிவு செய்த முத்தையாபுரம் போலீசார், முருகேசனை கடந்த 29ல் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகேசன் மீது ஏற்கனவே 17 புகார்கள் உள்ளன. அவற்றில், 12 புகார்கள் நில அபகரிப்பு தொடர்பானவை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் சகோதரர் என்பதால், போலீசாரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இடைஞ்சல்

அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகருக்கு சொந்தமானதாக இருக்கும் சோலார் நிறுவனத்துக்கு எதிராக முருகேசன் செயல்பட்டுள்ளார். அதை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் செயல்படுவது தெரிந்து, அவருக்கு சிலர் வாயிலாக எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆனால், அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்தே, மாரிமுத்து மனைவியுடனான தகராறு பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்னை மட்டுமல்ல; ஓட்டப்பிடாரம் பகுதியில் இயங்கி வரும், தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான காற்றாலை நிறுவனங்களுக்கும் முருகேசன் இடைஞ்சல் ஏற்படுத்தி உள்ளார். அதோடு, சிலை கடத்தலில் சிக்கிய நான்கு பேரில், ஒருவருடன் முருகேசன் தொடர்பில் இருந்ததாகவும் புகார் எழுந்து, அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. கூடவே, முருகேசன் மீதான அனைத்து புகார்களும் துாசி தட்டி எடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. அவர் மீது அடுத்தடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 01, 2025 12:35

இதெல்லாம் அரசியல் வட்டாரத்தில் ரொம்ப சகஜம். தடுத்து நிறுத்தவே முடியாது. ஏன்? ஏன் என்றால் நமது நீதிமன்றங்கள்தான் காரணம். வழக்கை உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பு வழங்கினால் குற்றங்கள் ஓரளவுக்கு குறைய வாய்ப்பிருக்கிறது. வாய்தா வாய்தா, ஜாமீன் ஜாமீன் என்று வழக்கை தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் இந்த கதிதான்.


சமீபத்திய செய்தி