உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன உறவில் அடுத்த கட்டம் ஜெய்சங்கர் நம்பிக்கை

சீன உறவில் அடுத்த கட்டம் ஜெய்சங்கர் நம்பிக்கை

புதுடில்லி, ''எல்லையில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், சீனாவுடனான உறவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.கிழக்கு லடாக்கில், 2020ல் சீன ராணுவம் நுழைய முயன்றது. அப்போது, இரு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல கட்ட பேச்சுகளுக்குப் பின், எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது.சீனாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் லோக்சபாவில் விளக்கம் அளித்தார். இந்நிலையில், ராஜ்யசபாவிலும் இது தொடர்பான அறிக்கையை அவர் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:எல்லையில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, எல்லையில் பதற்றத்தை தணிப்பது தான் அடுத்த கட்டம். எல்லைக்கு அருகே, தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவது, ஆயுத தளவாடங்களை திரும்ப பெறுவது அந்தக் கட்டமாகும்.லடாக் எல்லையில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, சீனாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இரு தரப்பு எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, இரு தரப்பு உறவை மேம்படுத்த, எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.இரு தரப்பு உறவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பு, நலன், இறையாண்மையை பாதுகாக்கும் வகையில், சீனாவுடனான அடுத்த கட்ட பேச்சுகள் இருக்கும். இந்த பேச்சுகள் விரைவில் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் ஜெய்சங்கர் தன் அறிக்கையை படித்து முடித்தவுடன், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிலர், விளக்கம் கேட்க முயன்றனர். அதற்கு, சபை தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதிக்கவில்லை. இதனால், கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !