சண்டூரில் புதிய வீட்டில் குடியேறிய ஜனார்த்தன ரெட்டி
பல்லாரி: இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, சண்டூரில் புதிதாக வீடு வாங்கி உள்ளார்.பல்லாரியின் செல்வாக்குமிக்க தலைவர் ஜனார்த்தன ரெட்டி, சட்டவிரோத சுரங்கத்தொழில் வழக்கில், ஆண்டுக் கணக்கில் சிறையில் இருந்தவர். அவருக்கு ஜாமின் அளித்திருந்த உச்ச நீதிமன்றம், பல்லாரிக்கு செல்ல தடை விதித்திருந்தது.அதன்பின் அரசியலில் ஈடுபட்ட அவர், தனிக்கட்சி துவங்கினார். கொப்பாலின் கங்காவதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பா.ஜ.,வுக்கு வந்துள்ளார். தன் கட்சியையும் இணைத்துள்ளார்.இதற்கிடையில் பல்லாரிக்கு செல்ல, உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை சமீபத்தில் நீக்கியது. இதனால் அவர் பல்லாரிக்கு வந்துள்ளார்.சண்டூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நெருங்கிய நிலையில், ஜனார்த்தன ரெட்டி பல்லாரிக்கு வந்ததால், பா.ஜ.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கட்சிக்கும் பலம் கிடைத்துள்ளது. இடைத்தேர்தலுக்கு தயாராகவும், இத்தனை ஆண்டுகளுக்கு பின் சொந்த மாவட்டத்துக்கு வருவதற்கான தடை நீங்கியதால், சண்டூரில் புதிதாக வீடு வாங்கியுள்ளார். நேற்று புதிய வீட்டில் குடிபுகுந்தார்.கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஜனார்த்தன ரெட்டிக்கும், அவரது சகோதரர் சோமசேகர ரெட்டிக்கும் மனக்கசப்பு இருந்தது. தற்போது சகோதரர்களுக்கிடையே மனக்கசப்பு மறைந்து, பழைய பாசம் திரும்பியுள்ளது. நேற்று நடந்த புதுமனை புகு விழா நிகழ்ச்சியில், சோமசேகர ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.