ஹைதராபாத்: கனிம சுரங்க முறைகேடு வழக்கில், கர்நாடக பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டிக்கு, தெலுங்கானா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதுடன், ஏழு ஆண்டு சிறை தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது.கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி, 63. பா.ஜ., முன்னாள் அமைச்சரான இவர் மீது, கனிம சுரங்க முறைகேடு வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2023 கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன், இவர் தனி கட்சி துவக்கினார். கொப்பால், கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு, இவர் மட்டும் வெற்றி பெற்றார். ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஓபுலாபுரம் கனிம சுரங்க முறைகேடு வழக்கில், கடந்த மாதம் 6ம் தேதி ஜனார்த்தன ரெட்டிக்கு, ஹைதராபாத் சி.பி.ஐ., நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டார்.அன்றைய தினமே, சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், ஜாமின் கேட்டும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன ரெட்டி மனு செய்தார். மனுவை நீதிபதி லட்சுமணன் விசாரித்து வந்தார். இதற்கிடையில், ஜனார்த்தன ரெட்டி எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.ஜாமின் மனு மீது தெலுங்கானா அரசு தரப்பு வாதிடுகையில், 'மனுதாரருக்கு ஜாமின் கிடைத்தால் அவர் வெளிநாடு சென்று விட வாய்ப்பு உள்ளது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பு வக்கீல், 'எனது மனுதாரர் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளார். அவரை மக்கள் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்து எடுத்து உள்ளனர்' என்றார்.இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்கியும், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி நேற்று உத்தரவிட்டார். 'பிணை தொகையாக 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்; நாட்டை விட்டு வெளியேறக் கூடாது' என்றும் நிபந்தனை விதித்தார்.