ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை
திலக்நகர்: ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் வீட்டில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பியோடியது.பெங்களூரு, ஜெயநகர் நான்காவது பிளாக் 13வது பிரதான சாலை, 12வது கிராசில் வசிப்பவர் நாகராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கிறார். இவர் கடந்த 13ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மந்திராலயாவுக்கு சென்றிருந்தார்.வீட்டை நோட்டம் விட்ட மர்ம கும்பல், முன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. பீரோக்களின் பூட்டையும் உடைத்து, 3 லட்சம் ரூபாய் ரொக்கம், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி கொண்டு தப்பியோடியது.நாகராஜ் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு, ஊரில் இருந்து வீடு திரும்பிய போது, முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, திருட்டு நடந்திருப்பது தெரிந்தது. உடனடியாக திலக் நகர் போலீஸ் நிலையத்தில், நாகராஜ் புகார் அளித்தார்.போலீசாரும், அங்கு வந்து பார்வையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். வழக்கு பதிவு செய்து, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.