| ADDED : பிப் 14, 2024 04:47 AM
பெங்களூரு : 'அனைத்து விதமான வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம்,' என்ற சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.கர்நாடகாவில், வர்த்தக கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கான கெடு, வரும் 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.இந்நிலையில், கன்னட மொழி மேம்பாட்டு சட்ட மசோதாவை, கன்னட வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி சார்பில், துணை முதல்வர் சிவகுமார் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.இதன்படி, வணிக வளாகங்கள், கடைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு மையங்கள், ஹோட்டல்கள் உட்பட அனைத்து விதமான வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழியில் கட்டாயமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.மாநில அளவில் கன்னட கலாச்சார இயக்குனரகத்தின் இயக்குனரை தலைவராகவும்; கன்னட வளர்ச்சி வாரியத்தின் செயலரை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட உள்ளனர்.சட்டசபையில் நிறைவேற்றிய பின், சட்ட மேலவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளன. அதன் பின், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் அவர் ஒப்புதல் அளித்த பின், அமலுக்கு வரும்.