உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு தடை; கர்நாடக காங்., - எம்.எல்.ஏ., நிம்மதி

வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு தடை; கர்நாடக காங்., - எம்.எல்.ஏ., நிம்மதி

புதுடில்லி : கர்நாடகாவின் மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா வெற்றி செல்லாது என்ற அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கர்நாடகாவில், 2023ல் சட்டசபை தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கையில், கோலார் மாவட்டம், மாலுார் தொகுதியில், பா.ஜ.,வின் மஞ்சுநாத் கவுடாவும், காங்கிரசின் நஞ்சே கவுடாவும் மாறி மாறி குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். முடிவில், காங்கிரசின் நஞ்சே கவுடா, 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மஞ்சுநாத் கவுடா வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், 'ஓட்டு எண்ணிக்கை ஒரே அறையில் நடந்திருக்க வேண்டும். ஆனால், மாலுார் தொகுதி ஓட்டு எண்ணிக்கை மட்டும், இரு அறைகளில் நடத்தப்பட்டு உள்ளது. 'இது, மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் விதிகளையும், தேர்தல் ஆணையம் பிறப்பித்த விதிகளையும் மீறுவதாக உள்ளது. எனவே, நஞ்சே கவுடாவின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும். இத்தொகுதி ஓட்டுகளை மீண்டும் எண்ண உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். கடந்த செப்., 16ல் நீதிபதி தேவதாஸ், 'நஞ்சே கவுடா வெற்றி பெற்றது செல்லாது. நான்கு வாரத்திற்குள் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தி, சட்டப்படி முடிவுகளை அறிவிக்க வேண்டும்' என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நஞ்சே கவுடா மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மல்யா பக்ஷி அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, 'மனுதாரரின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம், மனுதாரர், எம்.எல்.ஏ.,வாக தொடருவார். 'இருப்பினும், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். இதன் முடிவை அறிவிக்காமல், சீலிடப்பட்ட உறையில் வைத்து, தேர்தல் ஆணை யம் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்ற அனுமதி இல்லாமல், மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை அறிவிக்கக் கூடாது. விசாரணை நவ., 24க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை