UPDATED : ஆக 27, 2024 10:38 AM | ADDED : ஆக 27, 2024 08:06 AM
பெங்களூரு: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் செய்து தந்ததில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாருக்கு பங்கு இருப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி இருக்கிறது.தனது காதலி பிளஸ் நடிகையான பவித்ரா கவுடாவை சமூக வலைதளங்களில் சீண்டியதாக அவரது ரசிகர் ரேணுகா சுவாமியை கொன்றார், பிரபல கன்னட நடிகர் தர்ஷன். கைது செய்யப்பட்ட தர்ஷன், அவரது மேலாளர் நாகராஜ், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட பலரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.கன்னட திரையுலகில் இந்த கைது சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறையில் தர்ஷன் சொகுசாக வாழ்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அதை மெய்ப்பிக்கும் வகையில் சில நாட்கள் முன்பு ஒரு கையில் தேநீர் கோப்பை, மறுகையில் சிகரெட் சகிதம் பந்தாவாக நாற்காலியில் உட்கார்ந்தபடி தர்ஷன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பின. தமது நண்பருடன் வீடியோ காலில் பேசும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.சிறையில் அவருக்கு சொகுசான வசதிகளுக்கு பஞ்சமில்லை, சிறைத்துறை அதிகாரிகளே இதற்கு உடந்தை என்ற பேச்சுகள் எழ ஆரம்பிக்க, 9 அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் அரசு உறுதி அளித்து இருந்தது.இந் நிலையில் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதில் துணை முதல்வர் சிவக்குமாருக்கு பங்கு உள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.இது குறித்து எதிர்க்கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசோகா கூறி இருப்பதாவது; நடிகர் தர்ஷன் உதவியாளர் தமது வீட்டுக்கு வந்து உதவி கேட்டதாக துணை முதல்வர் சிவக்குமார் ஏற்கனவே கூறி இருந்தார். 5 நாட்களுக்கு முன்பாக சிறையில் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படி இருக்கையில் இப்போது மட்டும் சிறையில் செல்போன் வந்தது எப்படி? கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. சிறையில் தற்போது நடக்கும் சம்பவங்களே அதற்கு சிறந்த உதாரணம், அரசு இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.