சாம்ராஜ் நகர்: ''சுகாதார வசதி குறைவாக உள்ள பகுதி மக்கள் வசதிக்காக, மாநிலம் முழுதும் சுகாதார முகாம் நடத்தப்படும்,'' என, சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகாலில் நேற்று சுகாதார முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமை துவக்கிவைத்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:பெங்களூரில் எனது தொகுதியில் சுகாதார முகாம் நடத்தப்பட்டது. அப்போது மாநிலம் முழுதும் இதுபோன்று முகாம் நடத்த வேண்டும் என முடிவு செய்தேன். கொள்ளேகால்
இதன்படி, மாநிலத்தில் முதல் முகாம் கொள்ளேகாலில் நடந்துள்ளது. சுகாதார வசதி குறைவாக உள்ள பகுதி மக்கள் வசதிக்காக, மாநிலம் முழுதும் சுகாதார மேளா நடத்தப்படுகிறது.குறிப்பாக, மலைப்பகுதிகள், தொலைதுார தாலுகாக்களில் இந்த முகாம் நடத்தப்படும். மக்களுக்கு, சுகாதார நிலையம் அருகில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். உடல்நல பரிசோதனை செய்ய, பலரும் பெரும்பாலும் தயங்குகின்றனர்.இந்த முகாமில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, இலவச மருந்து வழங்கப்படும். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக, மைசூரு, பெங்களூரு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும். டயாலிசஸ் மையங்கள்
ஹனுார், ராமாபுராவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டயாலிசிஸ் மையங்கள் திறக்கப்படும். இதை மக்களிடம் கொண்டு செல்ல, சுகாதார துறையினர், இந்த மாபெரும் முகாமை நடத்துகின்றனர். விரிவான நோய் பரிசோதனை, மருந்துகள் வினியோகிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இம்முகாமில் மருத்துவ துறை, அறுவை சிகிச்சை, குழந்தைகள் பிரிவு, எலும்பு மற்றும் மூட்டு, மனநோய், சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை, கண், தோல், பல், நுரையீரல், புற்றுநோய், இதயம், ஆயுர்வேத பரிசோதனை நடத்தப்பட்டது.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் பதிவு செய்யப்பட்ட 6,500 நோயாளிகள் வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர். மேலும், 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், சுகாதார முகாமுக்கு நேரடியாக வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.நுாற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள், 1000க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள், சுகாதார முகாமில் ஈடுபடுத்தப்பட்டனர்.