உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம்பேவாலில் பாலிடெக்னிக் கெஜ்ரிவால் வாக்குறுதி

சம்பேவாலில் பாலிடெக்னிக் கெஜ்ரிவால் வாக்குறுதி

சப்பேவால்:“சப்பேவால் தொகுதியில் பாலிடெக்னிக் அமைக்கப்படும்,”என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்தார்.பஞ்சாப் மாநிலத்தில் கிதர்பாஹா, தேரா பாபா நானக், சப்பேவால் மர்றும் பர்னாலா ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. நவ.23ல் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.சப்பேவால் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் இஷாங்க்கை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:சப்பேவால் தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் செய்யப்படும். பஞ்சாப் மக்களுக்கு ஆம் ஆத்மி ஏற்கனவே பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இஷாங்கின் தந்தை டாக்டர் ராஜ்குமார் முதலில் காங்கிரசில் இருந்தபோது மக்களுக்கான எந்த வேலையும் அவரால் செய்ய முடியவில்லை. அங்கிருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்தவுடன், ஹோஷியார்பூர் மக்கள் அவரை எம்.பி.,யாக தேர்ந்தெடுத்தனர். ஹோஷியார்பூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்கிறார்.இப்போது அவருடைய மகன் உங்கள் முன் சட்டசபை தொகுதி வேட்பாளராக நிற்கிறார். இஷாங்கை வெற்றி பெறச்செய்ய வேண்டியது உங்கள் கடமை. சப்பேவால் தொகுதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்.சப்பேவால் தொகுதியில் ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு பிஸ்ட் டோப் கால்வாயில் இருந்து தண்ணீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். ஆதம்பூர் முதல் கர்ஷங்கர் வரையிலான சாலைக்கு பாபா பண்டா சிங் பகதூர் பெயர் சூட்டப்படும்.நாட்டிலேயே பஞ்சாப் மற்றும் டில்லி ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் மாதந்தோறும் அதிக மின்கட்டணத்தை மக்கள் செலுத்துகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ