சுதந்திர தின விழாவுக்கு இடையூறு காலிஸ்தான் ஆதரவாளர் அட்டூழியம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துாதரகத்தில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவின்போது, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் கூச்சல் எழுப்பி, இடையூறு ஏற்படுத்தினர். நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பிரிவினைவாத இயக்கம் தான் காலிஸ்தான். இது பயங்கரவாத இயக்கமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் ஆதரவாளர்கள், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ளனர். அங்கு உள்ள ஹிந்து கோவில்களின் வளாகங்களில் இவர்கள், தொடர்ந்து இந்தியா மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பு வாசகங்களை கிறுக்கிவிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு, அங்கு உள்ள இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் பலர், ஆர்வமுடன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், விழா கொண்டாட்டத்தை கெடுக்கும் வகையில் கூச்சல் போட்டனர். அங்கிருந்த இந்திய வம்சாவளியினர், பதிலுக்கு அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். கூச்சல் எழுப்பிய காலிஸ்தான் ஆதரவாளர்களை, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.