பொதுவாக அரண்மனைகள், நகர்ப்பகுதிக்கு அருகில் இருக்கும். எப்போதும் சுற்றுலா பயணியர் கூட்டம் இருக்கும். ஆனால் குடகில் உள்ள அரண்மனை வித்தியாசமானது. காட்டின் நடுவில் அமைந்துள்ளது.கர்நாடகாவின் மைசூரு மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் அரண்மனைகள் உள்ளன. நகர்ப்பகுதி நடுவிலோ அல்லது அருகிலோ இருக்கும். அடர்த்தியான வனப்பகுதி நடுவில், இயற்கை சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்ட அழகான அரண்மனையை பார்க்க விரும்பினால், சுற்றுலா பயணியர் குடகுக்கு வர வேண்டும். கர்நாடகாவின் மற்ற அரண்மனைகளுடன் ஒப்பிட்டால், இது முற்றிலும் மாறுபட்டதாகும்.குடகு மாவட்டத்தின், மிகவும் உயரமான மலை தடியண்டமோள் மலையாகும். மலைகளை வரிசையாக அடுக்கி வைத்தது போன்று தென்படும் மலைகளுக்கு நடுவே, யுவகவாடி கிராமத்தில் உயரமான குன்றின் மீது, அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு, அடர்த்தியான வனத்துக்கு நடுவில், அரண்மனையை ஏன் கட்டினர் என்ற கேள்வி எழும். அரண்மனையின் வரலாற்று பக்கங்களை புரட்டினால், இதற்கு விடை கிடைக்கும்.செல்வ செழிப்பான நாடாக இருந்த குடகை கைப்பற்றுவது திப்பு சுல்தானின் நோக்கமாக இருந்தது. குடகு மீது படையெடுத்து சென்று, இந்த நாட்டை ஆண்ட சிற்றரசர் தொட்ட வீர ராஜேந்திராவை சிறை பிடித்தார். பிரியா பட்டணா கோட்டையில் அடைத்து வைத்தார். ஆனால், 1791 - 92ல் ஆங்கிலோ - மைசூரு இடையே யுத்தம் மூண்ட போது, தொட்ட வீர ராஜேந்திரா, சிறையில் இருந்து தப்பினார்.தன் குடும்பத்துடன், குடகின், குர்ச்சி கிராமத்துக்கு வந்தார். அங்கிருந்த அவரது அரண்மனை நாசமாக்கப்பட்டிருந்தது. எதிரிகளிடம் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற, பாதுகாப்பான இடத்தை தேடியபடி, தன் சேனையுடன் வந்த போது, யுவகவாடி கிராமத்தின், தடியண்டமோள் மலை கண்களில் பட்டது.அந்த இடத்தை சுற்றி பார்த்த போது, மலைகள் நிறைந்த, அடர்த்தியான வனம் சூழ்ந்துள்ள, அந்த இடமே அரண்மனை கட்ட சிறந்த இடம் என, தெரிந்தது. உடனடியாக அங்கு அரண்மனை கட்டும்படி சேவகர்களுக்கு கட்டளையிட்டார். இதன்படி கட்டி முடிக்கப்பட்டது.தொட்ட வீர ராஜேந்திரா அரசரால் கட்டப்பட்ட அரண்மனை, முதலில் வைக்கோல் மேற்கூரை கொண்டிருந்தது. அதன்பின் ஆங்கிலேயர் காலத்தில் ஓடுகள் பொருத்தப்பட்டன. இரண்டு நுழை வாசல் உள்ள அரண்மனை, இரண்டு மாடிகள் கொண்டது. இரண்டாவது மாடியில் அழகான சிற்பங்களை காணலாம். இங்கு கலை நயங்கள் கொண்ட சிறு, சிறு அறைகள் உள்ளன. அரண்மனை உட்புறம் கலை நயங்களுடன் சுற்றுலா பயணியரை, சுண்டி இழுக்கிறது. ஜன்னல்கள், கதவுகளின் கலை நயம் பிரமிக்க வைக்கிறது.சுவர்களில் கலை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அம்பாரியில் அமர்ந்த ராஜா, அவருக்கு முன்னும், பின்னும் வாத்தியங்களுடன் செல்லும் சேனைகள் தென்படுகின்றன. அரண்மனை முற்றிலும் மரத்தால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.அரண்மனையில் 14 சிறிய அறைகள், பின் புறம் நான்கு இருட்டறைகளை காணலாம். அன்றைய காலத்தில் குற்றவாளிகளை, இந்த இருட்டறைகளில்தான் அடைத்தார்களாம். அரண்மனை முன்பாக சதுர வடிவில், சிறிய மண்டபம் உள்ளது. இதற்கு நான்கு நுழை வாசல்கள் உள்ளன.மண்டப மேற் பகுதியின் நான்கு திசைகளிலும் நந்தி சிலைகள் உள்ளன. இந்த மண்டபம் திருமண மண்டபம் என அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் ராஜ புரோஹிதர் சிவலிங்கசாமி முன்னிலையில், தொட்ட வீர ராஜேந்திரா மற்றும் மகாதேவம்மாவின் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.சிலர் புதையல் ஆசையால் ஆங்காங்கே தோண்டி சேதப்படுத்தினர். தொல் பொருள் துறை அரண்மனையை சீரமைத்தது. தற்போது புதிய களை வந்துள்ளது. இதற்கு முன் இங்கு செல்வதே சுற்றுலா பயணியருக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. சரியான சாலை, குடியிருப்பு வசதி இருக்கவில்லை. தடியண்டமோள் மலைக்கு செல்வோர், இந்த அரண்மனையில் தங்குவர். ஆனால் இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. உள்நாடு, வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்காக, ஏராளமான ஹோம் ஸ்டேக்கள் கட்டப்பட்டுள்ளன.அரண்மனை அருகில் நீர்வீழ்ச்சி உள்ளது. மழைக்காலத்தில் குன்றில் இருந்து கீழே பாய்ந்து வரும். மற்றொரு நீர்வீழ்ச்சி அரண்மனையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது. அந்த அழகான நீர் வீழ்ச்சியை மாதன்ட அப்பி என, அழைக்கின்றனர்.நகர் பகுதியில் இருந்து, வெகு தொலைவில் உள்ளதால், சுற்றுலா பயணியர் அவ்வளவாக வருவதில்லை. இதனால் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. மன அமைதி, நிம்மதியை தேடுவோருக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும்- நமது நிருபர் -.