வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரை மீட்க நடவடிக்கை எடுத்தவர் கிருஷ்ணா
சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட, கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க, முதல்வராக இருந்தபோது கிருஷ்ணா பல நடவடிக்கைகள் மேற்கொண்டார்.கர்நாடகாவில் 1999 முதல் 2004 வரை காங்கிரஸ் ஆட்சியில் கிருஷ்ணா முதல்வராக இருந்தார். 2000 ஜூலை 13ம் தேதி, காஜனுாரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருந்த, கன்னட பிரபல நடிகர் ராஜ்குமாரை, சந்தன கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றார்.ராஜ்குமார் கடத்தப்பட்டது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல நபர் ஒருவர் மிக சாதாரணமாக கடத்தப்பட்டுள்ளார். அரசு என்னதான் செய்கிறது என்று மாநில மக்கள் முழுவதும் பேசினர். இது கிருஷ்ணா அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.ராஜ்குமாரை மீட்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியுடன், கிருஷ்ணா தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.ஒருவழியாக 108 நாட்களுக்கு பிறகு ராஜ்குமாரை, வீரப்பன் அனுப்பி வைத்தார். இந்த 108 நாட்களும் சரியான உறக்கம் இல்லாமலும், நிம்மதி இல்லாமலும் கிருஷ்ணா இருந்ததாக அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.ராஜ்குமார் கடத்தல் குறித்து கிருஷ்ணா கூறியதாவது:வீரப்பன் தரப்பிலிருந்து ராஜ்குமாருக்கு சிக்கல் இருப்பதாக, கர்நாடக அரசுக்கு ஏற்கனவே ஒரு தகவல் கிடைத்தது. இதனால் நாங்கள் ராஜ்குமாருடன் பேசினோம். நீங்கள் காஜனுார் சென்றால் அரசிடம் தகவல் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். இதற்கு அவரும் சம்மதித்தார்.அவர் செல்லும்போதெல்லாம், அவருக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் கடத்தப்படுவதற்கு முன்பு, அங்கு சென்றபோது அரசிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஒரு வழியாக அவரை மீட்டு விட்டோம்.இவ்வாறு கிருஷ்ணா கூறியிருந்தார். - நமது நிருபர் -