நிரம்பும் நிலையில் கிருஷ்ணாபுரம் அணை
பள்ளிப்பட்டு:கிருஷ்ணாபுரம் அணையின் நீர்மட்டம் 20 மீட்டரில் தற்போது 19 மீட்டர் வரை நீர் நிரம்பியுள்ளது. பள்ளிப்பட்டில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், அம்மபள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம் அணை. கார்வேட்நகரம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து இந்த அணைக்கு நீர் வரத்து உள்ளது. 21 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 19 மீட்டர் உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. கார்வேட்நகரம், பச்சகாபாளையம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழியும் போதெல்லாம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கிறது. 20 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்ததும், இரவு நேரத்தில் அணை திறக்கப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் நீரால், பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் இரண்டு முறை இந்த அணை திறக்கப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அவ்வப்போது கொசஸ்தலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கரையோர கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.