உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிகில் கண்ணீருக்கு குமாரசாமி தான் காரணம் 

நிகில் கண்ணீருக்கு குமாரசாமி தான் காரணம் 

ராம்நகர்; ''பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் நிகில் வடிக்கும் கண்ணீருக்கு அவரது தந்தை குமாரசாமி, தாய் அனிதா தான் காரணம்,'' என்று, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறினார்.ராம்நகர், சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வரை ஆதரித்து, முன்னாள் எம்.பி., சுரேஷ் நேற்றைய பிரசாரத்தில் பேசியதாவது:கடந்த 2018 சட்டசபை தேர்தலில் சென்னப்பட்டணாவில் இருந்து வெற்றி பெற்ற குமாரசாமி, முதல்வர் ஆனார். 14 மாதங்கள் அவர் பதவியில் இருந்தும், சென்னப்பட்டணா தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் போட்டியிடும் குமாரசாமி மகன் நிகில், 'எப்படியாவது இந்த முறை என்னை வெற்றி பெற செய்யுங்கள்' என்று பிரசாரத்தின் போது கண்ணீர் விடுகிறார். அவரது கண்ணீருக்கு நானும், துணை முதல்வர் சிவகுமாரும் காரணம் என்று குமாரசாமி சொல்கிறார். நிகில் வடிக்கும் கண்ணீருக்கு நாங்கள் காரணம் இல்லை. குமாரசாமியும், அவரது மனைவி அனிதாவும் தான் காரணம். ராம்நகர் தொகுதியில் குமாரசாமியும், அனிதாவும் வெற்றி பெற்றனர். அவர்கள் சரியாக வேலை செய்திருந்தால், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராம்நகரில் நிகில் வெற்றி பெற்றிருப்பார். கடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் நிகில் தோற்று போனார். மகன் தோற்றதை அனுதாபமாக பயன்படுத்தி, இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் குமாரசாமி வெற்றி பெற்று, இப்போது மத்திய அமைச்சராகி விட்டார்.அவர்கள் தோற்று விட்டால் எங்கள் மீது பழி போடுகின்றனர். கண்ணீரை நம்பி மக்கள் ஏமாந்து விட வேண்டாம். சென்னப்பட்டணா மண்ணின் மகன் யோகேஸ்வர் தான். அவர் வெற்றி பெற்றால், தொகுதியின் வளர்ச்சிக்காக வேலை செய்வார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரும் சென்னப்பட்டணா மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை