| ADDED : டிச 26, 2025 08:43 PM
புதுடில்லி: '' இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகள், தப்பியோடியவர்களை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் 2016ல் இந்தியாவை விட்டு தப்பியோடினார். 2019 ல் அவர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் 125 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடந்த நிலையில் அவரும் 2010ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடினார். இருவரும் தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகின்றனர். அவர்களை நாடு கடத்துதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் லலிதா மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய் மல்லையாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மத்திய அரசையும், சட்டத்தையும் பகிரங்கமாக இருவரும் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.அந்த வீடியோவில்,' நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள். இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தப்பியோடியவர்கள். மீண்டும் இணையத்தையே அதிரவைக்கப் போகிறேன். இதோ உங்களுக்காகஒன்று. இதைப் பார்த்து பொறாமையிலேயே வயிறு எரியுங்கள் ' என இருவரும் குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகள், தப்பியோடியவர்களை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். இதற்காக பல அரசுகளுடன் பேச்சு நடத்துகிறோம். லும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த வழக்குகளில் பலவற்றில் பல அடுக்கு சட்ட சிக்கல்கள் உள்ளன. ஆனால், அவர்கள் இங்குள்ள நீதிமன்றங்களில் விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.