மினி மின்சார பஸ்கள் துவக்கம் ஒத்திவைப்பு
புதுடில்லி:“காஜிப்பூரில் இருந்து 76 மின்சார மினி பஸ்கள் துவக்க விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.மாநகரின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் விதமாக, காஜிப்பூர் பணிமனையில் இருந்து 76 மின்சார மினி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 'தேவி' எனப்படும் டில்லி மின்சார வாகன பரிமாற்றம் திட்டத்தின் கீழ், இந்த மின்சார பஸ் சேவை துவக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள், மாநகரின் முக்கிய சந்திப்புகள் ஆகியவற்றை இந்த மினி பஸ் சேவை இணைக்கும். ஒவ்வொரு பஸ்சும் 12 கி.மீ., துாரத்துக்கு செல்லும்.இந்த 'தேவி' மின்சார பஸ் சேவை துவக்க விழாவில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்கிறார் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா நேற்று கூறியதாவது:கத்தோலிக்க மதத்து தலைவர் போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து தேசிய அளவிலான துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, டில்லி அரசின் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.'தேவி' திட்டத்தின் கீழ், மின்சார மினி பஸ்கள் நேற்று துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.