மலையேற்றம் பதிவுக்கு இணையதளம் துவக்கம்
பெங்களூரு : மலையேற்றம் செல்வோர் முன்பதிவு செய்வதற்கு வசதியாக, கர்நாடக அரசு, 'ஆரண்ய விகார்' என்ற இணையதளத்தை துவக்கி உள்ளது.கர்நாடகாவில் ஐ.டி., -பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடிக்கடி மலையேற்றத்திற்கு செல்வது வழக்கம். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா துறை அலுவலகங்களில், டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பணம் வாங்கி கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்காமல் சட்டவிரோதமாக மலையேற்றத்திற்கு அனுப்பியதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மலையேற்றம் செல்வதற்கு ஒரே இணையதளத்தில், முன்பதிவு செய்யும் திட்டம் துவங்கப்படும் என, வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறி இருந்தார்.அதன்படி நேற்று ஆரண்ய விகார் என்ற இணையதளம் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக குடகு, சாம்ராஜ்நகர், சிக்கபல்லாபூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைகளுக்கு, புதிய இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலையேற்றத்திற்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டுகளை 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யலாம். ரத்து செய்தால் டிக்கெட் தொகையில் 75 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். https://aranyavihaara.karnataka.gov.in/ என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.