கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
மவுரியா என்கிளேவ்: கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்க தகுதியற்ற வழக்கு என்று கூறி, மூன்று பேருக்கு கடுங்காவல் ஆயுள் தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.மவுரியா என்கிளேவ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 2015 ஜனவரி 9 அன்று, பிதம்புராவில் உள்ள ஒரு அலுவலகத்துக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கொள்ளையடிக்கும் முயற்சியில் ஒரு வாலிபரை சுட்டுக் கொன்றது.இதுகுறித்து மவுரியா என்கிளேவ் போலீசார், கொலை, கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, முகமது அதில் கான், அமித் குமார், ஷெஹ்சாத் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்த கூடுதல் அமர்வு நீதிபதி விக்ரம், மூன்று பேருக்கும் கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த வழக்கை அரிதினும் அரிதானதாக கருத முடியாது என்று கூறி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர் வினீத் தஹியாவின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.