| ADDED : ஜன 17, 2024 03:47 PM
புதுடில்லி: லோக்சபா தேர்தல் வாக்குறுதி குறித்த கருத்துக்களை மக்கள் இணையதளம் அல்லது இமெயில் வாயிலாக தெரிவிக்கலாம் என்று காங்., கட்சி அறிவித்துள்ளது.நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை துவங்கி விட்டன. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தனது தே.ஜ., கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அதேபோல் பா.ஜ.,வை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ‛இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிர முயற்சி செய்து வருகிறது. ஒரு பக்கம் காங்.,எம்.பி ராகுல் மக்கள் மனதில் இடம் பிடிக்க, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவக்கி உள்ளார். மறுபக்கம் கட்சி சார்பில், இன்று (ஜன.,17) லோக்சபா தேர்தல் வாக்குறுதி குறித்த கருத்துக்களை மக்கள் https://awaazbharatki.inஎன்ற இணையதளம் அல்லது inc.inஎன்ற இமெயில் வாயிலாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.