யுனெஸ்கோ சமையல் கலை நகர போட்டியில் பங்கேற்கும் லக்னோ
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், கலை பண்பாட்டு அமைப்பு சார்பில், 2004ல், 'கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்' என்ற திட்டம் துவங்கப்பட்டது. கலாசாரம், கலைகள், உணவு மற்றும் சமையல் கலை ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் விருது வழங்கப்படுகிறது.இந்நிலையில், கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க் திட்டத்தில், சமையல் கலை பிரிவில், நம் நாட்டின் சார்பில், லக்னோ நகரம் விண்ணப்பிக்கவுள்ளது.'நவாப்களின் நகரம்' என்றழைக்கப்படும் லக்னோ, அதன் வளமான வரலாறு, அரச கலாசாரம் மற்றும் மிக முக்கியமாக, சிற்றுண்டி உணவு வகைகளுக்கு பிரபலமானது.லக்னோவின் பிரபலமான உணவு வகைகள் குறித்த அறிக்கையை, யுனெஸ்கோவிடம் இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க, விரிவான தகவல்களை சிறப்புக் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.இதன்பின், யுனெஸ்கோ குழுவினர் விரைவில் லக்னோவிற்கு வந்து நகரத்தின் சமையல் கலை கலாசாரத்தை நேரில் ஆய்வு செய்து சான்றளிப்பர். லக்னோவின் உணவு பாரம்பரியம் பற்றிய விரிவான தகவல்களை ஒன்றிணைப்பதில், மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த அபா நரேன் லம்பா என்பவர் முக்கிய பங்காற்றினார்.
அப்படி என்ன ஸ்பெஷல்?
லக்னோவின் உணவு அடையாளம் அதன் அரச காலத்தில் இருந்து ஆழமாக வேரூன்றியுள்ளது. அரசர்களுக்கு அவர்களின் சமையல்காரர்கள் செய்த உணவு வகைகள், தற்போதும் உணவு பிரியர்களை வியக்க வைக்கின்றன. இறைச்சி பிரியர்களுக்கு லக்னோ ஒரு சொர்க்கம் என்றாலும், சைவ உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளுக்கும் மிகவும் பிரபலமானது. 'டண்டே கபாப்கள், ககோரி கபாப்ஸ், அவாதி பிரியாணி' போன்ற உணவு வகைகள் லக்னோவில் மிகவும் பிரபலம்.