உத்தரகண்டில் முடிவுக்கு வந்தது மதரசா வாரிய சட்டம்
டேராடூன் : உத்தரகண்டில், சிறுபான்மையினர் கல்வி மசோதாவுக்கு மாநில கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, மதரசா வாரிய சட்டம் நீக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மதரசா எனப்படும், முஸ்லிம் மத கல்வியை போதிக்கும் பள்ளிகள் மதரசா வாரிய சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற முடியும். இதனால், கிறிஸ்துவர்கள், சீக்கியர், பார்சி உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களால், அரசு வழங்கும் சலுகையை பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மதரசா வாரிய சட்டத்தின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளிகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கவில்லை என்ற புகாரும் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஆகஸ்டில் நடந்த உத்தரகண்ட் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் போது, மதரசா வாரிய சட்டத்துக்கு மாற்றாக, அனைத்து சிறுபான்மையின மக்களும் பயன்பெறும் வகையில் 'உத்தரகண்ட் சிறுபான்மை கல்வி மசோதா - 2025' நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு மாநில கவர்னர் குர்மித் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார். இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: இந்த மசோதா மூலம் சீக்கியர், சமணர், பவுத்தர், கிறிஸ்துவர், பார்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களும், சிறுபான்மையினர் கல்வி சட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும். உத்தரகண்ட் பள்ளி கல்வி வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, இந்நிறுவனங்களில் கல்வி வழங்கப்படுவதையும், மாணவர்களின் மதிப்பீடுகள் நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதையும் இந்த சட்டம் உறுதி செய்யும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.