நிகழ்ச்சி தொகுப்பாளினி குறித்து அவதுாறு பரப்பியவர் சிக்கினார்
புதுடில்லி: சமூக ஊடகத்தில் போலி பெயரில் கணக்கு துவக்கி, பெண் செய்தி தொகுப்பாளர் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட மும்பையைச் சேர்ந்த இளைஞரை டில்லி போலீசார் கைது செய்தனர். ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் சேட் கமல் பிரகாஷ்,40. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்தார். சமூக ஊடகத்தில் போலி பெயரில் கணக்கு உருவாக்கினார். டில்லியில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரியும் பெண்ணின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றி, அவதுாறான கருத்துக்களை வெளியிட்டார். மேலும், பெண் தொகுப்பாளினிக்கு போனில் அழைத்த பிரகாஷ், விரைவில் நடக்கவுள்ள திருமணத்தை சீர்குலைத்து விடுவதாகவும் மிரட்டிஉள்ளார். இதுகுறித்து, தொகுப்பாளினி கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், சமூக ஊடகப் பதிவு மற்றும் போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். மும்பையில் இருந்து சமூக ஊடகத்தில் அவதுாறு கருத்துக்களை பிரகாஷ் பதிவிட்டு வருவதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர் . இதையடுத்து, மும்பை விரைந்த தனிப்படை போலீசார், சேட் கமல் பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் லேப் - டாப் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.