மனைவியை கொலை செய்தவர் 15 ஆண்டுக்கு பின் சிக்கினார்
புதுடில்லி: வடமேற்கு டில்லியில் 15 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிய கணவன், குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். வடமேற்கு டில்லி ஜஹாங்கிர்புரியில், 15 ஆண்டுகளுக்கு முன், மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்தவர் நரோத்தம் பிரசாத். கடந்த 2010ம் ஆண்டு மே 31ம் தேதி மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். தன் மனைவி எழுதியது போல தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி, மனைவி உடல் அருகே வைத்து விட்டு தப்பினார். அடுத்த சில நாட்களில் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து, அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடற்கூறு ஆய்வில், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பெண்ணின் கணவர் நரோத்தம் பிரசாத்தை தேடினர். மேலும், பிரசாத் குறித்து தகவல் தருவோருக்கு 10,000 ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டது. நரோத்தம் பிரசாத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிக் கொண்டிருந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் அவர் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. குஜராத்தின் சோட்டா உதய்பூருக்கு சென்ற தனிப்படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நரோத்தம் பிரசாத்தை 5ம் தேதி கைது செய்தனர். டில்லி அழைத்து வரப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க பல மாநிலங்களில் வசித்தது மட்டுமின்றி, குடும்பத்தினருடனும் தொடர்பின்றி இருந்துள்ளார். விசாரணை நடக்கிறது.